உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காஸ் நுகர்வோர் கூட்டத்தை ரத்து செய்வதா?

காஸ் நுகர்வோர் கூட்டத்தை ரத்து செய்வதா?

திருப்பூர்: காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்புத்துணி கட்டி நுகர்வோர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். காஸ் நுகர்வோரின் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வு காணும்வகையில், மாவட்ட அளவிலான காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நேற்று மாலை, 5:00 மணிக்கு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம், அறை எண்: 120ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, காஸ் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் காஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 20 பேர், தங்கள் காஸ் புத்தகத்துடன், மாலை, 4:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால், அறை எண்: 120ல் வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்புமின்றி காஸ் நுகர்வோர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம், நுகர்வோர் நல முன்னேற்ற சங்க செயலாளர் சரவணன், திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு இணை செயலாளர் சிந்து சுப்பிரமணியம், பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்பேர் அசோசியேஷன் துணை தலைவர் கிருஷ்ணசாமி உள்பட நுகர்வோர் அமைப்பினர் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு, கலெக்டர் அலுவலக போர்டிகோ பகுதியில் நின்றனர். கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் ஆகியோர், நுகர்வோர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து, நுகர்வோர் அமைப்பினர், மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் மனு அளித்தனர். இம்மாதத்துக்கான காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், வேறு ஒரு நாளில் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'தினமலர்' செய்திகளை இணைத்து மனு: காலாண்டுக்கான நுகர்வோர் கூட்டமும் முறையாக நடத்தப்படுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், பொறுப்பற்ற முறையில், நுகர்வோர் அமைப்பினரை அவமதிக்கின்றனர். இதை சுட்டிக்காட்டும் வகையிலேயே, வாயில் கருப்பு துணி கட்டி, மவுன போராட்டம் நடத்தியுள்ளோம். டி.ஆர்.ஓ. மீது குற்றம் சுமத்தும்வகையில், பல்வேறு புகார் எழுந்துள்ளன. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரி தலைமையில் காஸ் நுகர்வோர் கூட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. காழ்ப்புணர்ச்சி காரணமாக, நுகர்வோர் அமைப்புகளை அவமதிப்பதோடு, மாதாந்திர மற்றும் காலாண்டு கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்காத டி.ஆர்.ஓ. மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் வெவ்வேறு நாட்களில் வெளியான செய்திகளை இணைத்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் மனு அளித்துள்ளோம். - நுகர்வோர் அமைப்பினர்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ