பி.ஏ.பி., வாய்க்கால் குப்பைக்கிடங்கா?
பொங்கலுார்; பி.ஏ.பி., பிரதான வாய்க்கால், 124 கி.மீ., நீளம் உள்ளது. பிரதான வாய்க்காலில் இருந்து பல இடங்களில் பகிர்மான கால்வாய்கள் பிரிகின்றன. பகிர்மான கால்வாய்களில் இருந்து விவசாய நிலங்களுக்கு சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் செல்கிறது. மதகுகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு சிமென்ட் பைப் அமைக்கப்பட்டு நேரடியாக நிலத்திற்குள் தண்ணீர் செல்கிறது. சிமென்ட் பைப்பில் குப்பைகள் அடைத்துக் கொள்ளாமல் இருப்பதற்காக இரும்புச் சல்லடை அமைக்கப்பட்டுள்ளது.பொங்கலுார், ஆண்டி பாளையம், காங்கயம் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் நேரடியாக வாய்க்காலில் கொட்டப்படுகிறது. இவை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சல்லடைகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது. தண்ணீர் விவசாய நிலத்திற்கு செல்வது தடை படுகிறது. ஒவ்வொரு மதகிலும் நான்கைந்து விவசாயிகள் முறை வைத்து பாசனம் செய்கின்றனர். இரவு - பகல் என, 24 மணி நேரமும் விவசாயிகள் தண்ணீரை எடுப்பதற்காக துாங்காமல் விழித்திருப்பர். தண்ணீர் விவசாய நிலத்திற்கு வருவதை பிளாஸ்டிக் அடைத்துக் கொள்வதால் மதகுகளின் முன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இரவு பகலாக தவம் கிடக்கின்றனர்.இது குப்பையை வாய்க்காலில் கொட்டும் பொதுமக்களுக்கோ, ஊராட்சி நிர்வாகத்திற்கோ புரிவதில்லை.பிளாஸ்டிக் கழிவுகள் விவசாய நிலத்திற்குள் அடித்துச் செல்லப்படுவதால் அங்குள்ள புற்களை மேயும் கால்நடைகளின் உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தும் உள்ளது.பிளாஸ்டிக் கழிவுகளை வாய்க்காலில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு கண்டு கொள்வதில்லை. இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.