தி.மு.க., நிர்வாகி ராஜினாமா; கோஷ்டி பூசல் எதிரொலி?
திருப்பூர் : திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க., அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி. கட்சி தலைவர் ஸ்டாலின், வடக்கு மாநகர தி.மு.க., செயலாளர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் ஆகியோருக்கு, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், 'திருப்பூர் வடக்கு மாநகர அவைத்தலைவர் பதவியிலிருந்து என்னை விடுவிக்க வேண்டுகிறேன். எனக்கு கட்சிப் பணியில் மத்திய மாவட்ட தி.மு.க., வில் இடம் பெற்றுள்ள தெற்கு தொகுதி நல்ல பரிச்சயம். கட்சி மற்றும் தேர்தல் பணிகள் மேற்கொள்வதில் எனக்கு அதில் வசதி அதிகம். எனவே, என்னை வடக்கு மாநகர அவைத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கவும், மத்திய மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றவும் அனுமதிக்க வேண்டுகிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார். காரணம் என்ன?
திருப்பூர் தி.மு.க., வில், செல்வராஜ் ஒரு கோஷ்டி யாகவும், அமைச்சர் சாமிநாதன் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதில் தற்போது மேயர் தினேஷ்குமார் மூன்றாவது கோஷ்டியை உருவாக்கி விட்டார். நகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி கட்சியில் இணைந்தது முதல் தற்போதைய மத்திய மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ.,செல்வராஜின் தீவிர ஆதரவாளர். தற்போது தினேஷ் குமார் வடக்கு மாவட்ட செயலாளரான நிலையில், இளைஞர் அணி செயலாளராக இருந்த தங்கராஜ் வடக்கு மாநகர கட்சியின் செயலாளரானார்.இவரும் தினேஷ்குமார் ஆதரவாளராக உள்ள நிலையில், ஈஸ்வரமூர்த்திக்கு தனியாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுதவிர, கட்சிப் பணிகள், கூட்டங்கள் எல்லாவற்றிலும் அவருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனால், தான் அவர் தனது அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.