மாணவர்களின் மாற்றம் உணர்வது அவசியம்! பெற்றோருக்கு கல்வி அதிகாரி அட்வைஸ்
அவிநாசி; அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எஸ்.எம்.சி., கூட்டம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மேலாண்மைக்குழு தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, வட்டார கல்வி அலுவலர் சுந்தர்ராஜ் பங்கேற்று பேசினார். எஸ்.எம்.சி., உறுப்பினர்கள் பேசுகையில், 'பள்ளியில் மாணவிகளுக்கு கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். 1 முதல், 7ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உட்காருவதற்கு பெஞ்ச், டெஸ்க் ஏற்பாடு செய்து தர வேண்டும். பள்ளி வளாகத்தில் கபடி, கோகோ விளையாட்டுக்கு பிரத்யேக இடம் மற்றும் அதற்கான வசதி செய்து தர வேண்டும்' என்பது போன்ற கருத்துகளை வலியுறுத்தினர். திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ பேசியதாவது; தமிழகத்தில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பான முறையில் பாடம் கற்பிக்கின்றனர். பள்ளி முடித்து வீடுகளுக்கு செல்லும் குழந்தைகளை, பெற்றோர் கண்காணித்து, அவர்களிடம் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். குழந்தைகளிடம் அன்பாக பேச வேண்டும். தினமும், பள்ளியில் என்ன நடந்தது, ஆசிரியர்கள் என்னென்ன கற்றுக் கொடுத்தனர் என்பதை கேட்டறிய வேண்டும். பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பிள்ளைகள் சொல்லும் போது, அதில் எது நல்லது; எது தீயது என்பதை ஆய்ந்தறிந்து, மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இதனால், மாணவர்கள் முன்னேற்றமடைவர்; இதை கண்கூடாக உணர முடியும். அதே போன்று ஆங்கில ஆசிரியர்கள் மாணவர்களிடம் இலக்கண பிழையின்றி தான் அவர்கள் ஆங்கிலம் பேச வேண்டும் என நினைக்காமல் தவறாக பேசினாலும் அதை ஏற்று, அதில் உள்ள தவறுகளை திருத்தும் போது, ஆங்கிலம் கற்பதில் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கி, ஆங்கிலத்தில் பேசும், எழுதும் திறமையை மாணவர்கள் பெறுவர். இவ்வாறு, அவர் பேசினார்.