ஜம்புக்கல் மலைத்தொடர் காப்புக்காடாக மாற்றப்படும்
உடுமலை ;உடுமலை அருகேயுள்ள ஜம்புக்கல் மலைப்பகுதியை காப்புக்காடாக அறிவித்து, மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:உடுமலை அருகே, ஆண்டியகவுண்டனுார், எலையமுத்துார் கிராம பகுதியில், மேற்கு தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியாக, 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஜம்புக்கல் மலைத்தொடர் அமைந்துள்ளது.இதனை போலி ஆவணங்கள் வாயிலாக தனியார் ஆக்கிரமித்து, பசுமையான மலையை அழித்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான மலையை மீட்க வேண்டும், என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இவ்வாறு, வன எல்லையை ஒட்டிய காப்புக்காடுகளில் காணப்பட்ட ஏராளமான வன விலங்குகள், இவ்வாறு மலைகள், காடுகள் அழிப்பதால், சிறிய வன விலங்குகள் அரிதாகி வருகின்றன.அதே போல், வனத்தை முறையாக வனத்துறை பராமரிக்காததால், குரங்குகளுக்கு தேவையான உணவு கிடைக்காமல், வனத்தை விட்டு வெளியேறுகின்றன. வனப்பகுதிகளில், பழ வகை மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, பேசினர்.உடுமலை வனச்சரகர் மணிகண்டன்,' ஜம்புக்கல் மலைப்பகுதியை காப்புக்காடாக அறிவித்து, மரக்கன்றுகள் நடவு செய்து, வனமாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென தனி திட்ட மதிப்பீடு தயாரித்து, மரங்கள், பழ வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்,' என்றார்.