உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கபடியே முத்துசாமியின் மூச்சுக்காற்று

 கபடியே முத்துசாமியின் மூச்சுக்காற்று

'உ டற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள் முதல், பணி ஓய்வு பெற்று ஆண்டுகள் பல கடந்தும், இன்று வரை இவரது மூச்சுக்காற்றில் கபடி விளையாட்டு இரண்டற கலந்திருக்கிறது' ஊத்துக்குளி அருகேயுள்ள சர்க்கார் பெரியபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 74. பட்டப்படிப்பு, உடற்கல்வி ஆசிரியர் படிப்பு என, கல்வி தகுதியில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்தார்; அதே நேரம் கபடி விளையாட்டிலும் தன் திறமையை வளர்த்து, பல்வேறு போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். கடந்த, 1979ல் உடுமலை அரசுப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். திருப்பூர் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில், 1981 முதல், 2006 வரை உடற்கல்வி ஆசிரியர், அதனை தொடர்ந்து, 2006 முதல், 2009ம் ஆண்டு வரை உடற்கல்வி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணியாற்றினார். பணி புரிந்த பள்ளிகளில் ஏராளமான கபடி வீரர், வீராங்கனைகளை உருவாக்கி, அவர்களை மாநில போட்டிகளிலும் பங்கெடுக்க செய்து, வெற்றி வாகை சூட வைத்துள்ளார். மாநில, அகில இந்திய, சர்வதேச அளவில் கபடி நடுவராக பணியாற்றி, திருப்பூரின் முதல் சர்வதேச நடுவர் என்ற பெருமையை பெற்றார். உலக கோப்பை, ஆசிய போட்டி, அகில இந்திய காவல் துறையினருக்கான போட்டி உட்பட 100க்கும் மேற்பட்ட அகில இந்திய கபடி போட்டியில் நடுவராக பணியாற்றியிருக்கிறார். சாரண, சாரணியர் இயக்க ஆசிரியராக பணியாற்றி, ஏராளமான மாணவ, மாணவியரை திறம்பட உருவாக்கி, அவர்கள் ஜனாதிபதி விருது; தமிழக கவர்னர் விருது பெற வழிகாட்டியிருக்கிறார். கடந்த, 2005ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்.

லங்காடி போட்டியில் தமிழகம் முதலிடம்

பணி ஓய்வுக்கு பின், 2010 முதல், 2020 வரை 'லங்காடி' எனப்படும், நொண்டி அடித்து விளையாடும் விளையாட்டின் மாநில செயலாளராக பணியாற்றினார். அக்காலகட்டத்தில் தான், இந்த விளையாட்டில் தமிழக அணி, இந்திய அளவில் முதலிடம் பெற்றது. 2016ல், இந்திய லங்காடி அணி பயிற்சியாளராக நியமிக்கபட்டு, சர்வதேச அளவில் இந்திய அணி தங்கம் வெல்ல காரணமாக இருந்திருக்கிறார். 2010 முதல் தற்போது வரை, திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக நடுவர் குழு தலைவராக செயல்பட்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி