காரீப் பருவ டிஜிட்டல் பயிர் சர்வே!வரும், 5ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
திருப்பூர்,; 'மாநிலம் முழுதும் மேற்கொள்ளப்பட்டு வரும் காரீப் பருவத்துக்கான டிஜிட்டல் பயிர் சர்வே பணியை, வரும், 5ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' என, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. பணியாளர் பற்றாக்குறையை தவிர்க்க வேளாண் கல்லுாரி மாணவர்கள் மற்றும் மகளிர் குழுவினரை 'சர்வே' பணியில் இணைத்துக் கொள்ள வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் வேளாண் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பணிகளை ஒருங்கிணைக்க விவசாயிகளின் விவரம், அவர்களது நிலத்தின் தன்மை, பரப்பளவு, பயிர் வகைகள், விவசாயிகள் பெறும் வருமானம், பெற்றுள்ள கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் டிஜிட்டல்மயமாக்கும் பணிகளில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இந்த சர்வே அறிக்கை அடிப்படையில் தான் மத்திய அரசு நிதி ஒதுக்கீடும் செய்கிறது.இப்பணியை வருவாய்த்துறையினர் வாயிலாக அரசு முயற்சி மேற்கொண்ட நிலையில், இதற்கு வருவாய்த்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.எனவே, மாநில அரசின் வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் வாயிலாக இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 'ராபி' பருவத்துக்கான பயிர் சர்வே பணி முடிந்துள்ள நிலையில், தற்போது 'காரிப்' பருவத்துக்கான டிஜிட்டல் பயிர் சர்வே பணி துவங்கியுள்ளது. ஏப்., முதல் செப்., வரை விளைவித்து அறுவடை செய்யப்படும் பயிர் விவரங்கள் இதில் இடம் பெறும்.வேளாண் அலுவலர்கள் கூறியதாவது:கிட்டத்தட்ட 7,8 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிக்கு ஒரு வேளாண் மற்றும் தோட்டகலை உதவி அலுவலர்கள் மட்டுமே உள்ள களப்பணியாற்ற வேண்டிய நிலையில், டிஜிட்டல் பயிர் சர்வே பணி முழுமையும் வேளாண், தோட்டக்கலை அலுவலர்களால் செய்து முடிப்பது கடினம். அவர்களுக்கு உதவியாக வேளாண் கல்லுாரி மாணவர்கள் மற்றும் மகளிர் குழுவினரை ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு, 'டிஜிட்டல் சர்வே' குறித்த போதிய புரிதல் இல்லை. இருப்பினும், இயன்றவரை துல்லியத்துன்மையுடன் விவரம் சேகரித்து வழங்கி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.