மேலும் செய்திகள்
52வது 'நிட் பேர்' கண்காட்சி: 17ல் துவங்குகிறது
07-Sep-2025
திருப்பூர்; 'நிட்பேர்' கண்காட்சியை பார்வையிட உலகளாவிய வர்த்தகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இரண்டு நாட்களில், 25 வர்த்தகர்கள்; 70 வர்த்தக முகமையினர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஆடை ரகங்களை பார்வையிட்டு, வர்த்தக விசாரணை நடத்தியுள்ளனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஐ.கே.எப்., அசோசியேஷன் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், 52 வது இந்தியா இன்டர் நேஷனல் நிட்பேர் கண்காட்சி, திருமுருகன்பூண்டியிலுள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்றுமுன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, கரூர், சேலம், கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனங்கள், புதுமையான டிசைன்களில் உருவாக்கப்பட்ட பின்னலாடை உள்ளிட்ட ஆயத்த ஆடை ரகங்கள், மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை கண்காட்சியில் இடம்பெறச்செய்துள்ளன. உலகளாவிய நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், திருப்பூரில் முகாமிட்டு, ஐ.கே.எப்., கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்; ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வழங்குவது தொடர்பாக, அரங்கம் அமைத்துள்ள உற்பத்தி நிறுவனங்களிடம் வர்த்தக விசாரணைகள் நடத்துகின்றனர். இரண்டாவது நாளான நேற்று, பிரிட்டன், கொலம்பியா, பிரான்ஸ், நார்வே, இலங்கை நாட்டு வர்த்தகர்கள், நிட்பேர் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும்கூட, அமெரிக்க வர்த்தகர்களும், திருப்பூரில் நடைபெற்றுவரும் கண்காட்சியை பார்வையிடவும், வர்த்தக விசாரணைகள் நடத்தவும் தவறவில்லை; நேற்றயை கண்காட்சியில், அமெரிக்காவை சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள், கண்காட்சி முழுமையும் இடம்பெற்றுள்ள ஆடை ரகங்களை பார்வையிட்டு, வர்த்தக விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம், உலகளாவிய 15 வர்த்தகர்களும்; இரண்டாவது நாளான நேற்று 10 வர்த்தகர்களும் கண்காட்சியை பார்வையிட்டுச்சென்றுள்ளனர். அதேபோல், இரண்டு நாட்களில் உலகளாவிய நாட்டு வர்த்தகர்களின், வர்த்தக முகமையினர் 70 பேர், நிட்பேர் கண்காட்சியை பார்வையிட்டு, விசாரணைகள் நடத்தியுள்ளனர்.
இன்றுடன் நிறைவு
வர்த்தகர்களை ஈர்த்துவரும் நிட்பேர் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவடைகிறது. வர்த்தகர்கள், வர்த்தக முகமையினர் ஆர்வமுடன் கண்காட்சியை பார்வையிட்டு, ஆடைகளின் விலை, எவ்வகையான தரச்சான்றுகள் பெறப்பட்டுள்ளன என்பன உள்பட ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வழங்குவது தொடர்பான விவரங்களை கேட்டறிகின்றனர். இதனால், அரங்கம் அமைத்துள்ள உற்பத்தி நிறுவனத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கண்காட்சி வாயிலாக, வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து புதிய சந்தை வாய்ப்புகள் கை கூடும்; ஏற்றுமதி வர்த்தகம் என்கிற நம்பிக்கை, ஆடை உற்பத்தியாளர்களிடம் பிறந்துள்ளது. கண்காட்சி, இன்று மாலை, 6:00 மணியுடன் நிறைவடைகிறது. காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
நிட்பேர் கண்காட்சியில் அரங்குகளை சிறப்பாக வடிவமைத்து, ஆடை ரகங்களை காட்சிப்படுத்தியுள்ள நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று விருது வழங்கப்பட்டது. சிறுவாணி யார்ன்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த பங்கேற்பாளர் விருது வழங்கப்பட்டது. பி.பி.எஸ், எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாமிடம்; எஸ்.டி., எக்ஸ்போர்ட்ஸ்க்கு, மூன்றாமிடம்; கேன்பெர்க் குளோபல் சோர்ஷிங் நிறுவனத்துக்கு ஆறுதல் நிலைக்கான விருதுகள் வழங்கப்பட்டன. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு விருது வழங்கி, வாழ்த்தினார். ஏற்றுமதியளர்கள் சங்க பொது செயலாளர் திருக்குமரன், 'அபாட்' சங்க தலைவர் இளங்கோவன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
07-Sep-2025