இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் விரைவில் ஆய்வகம்!
திருப்பூர்; 'திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், விரைவில் அனைத்து வகை பரிசோதனை ஆய்வகமும் அமைக்கப்படும்' என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருப்பூர் ஆத்துப்பாளையத்தைச் சேர்ந்த நுகர்வோர் நல மன்ற உறுப்பினர் காளீஸ்வரன், முதல்வர் தனிப்பிரிவுக்கு, திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, இ.எஸ்.ஐ., கண்காணிப்பாளர் சீனிவாசன் அளித்த விவரம்:மருத்துவமனை வளாகத்தில் குறைந்த விலையில் உணவகம்; கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை கருவிகள்; பல் மருத்துவ உபகரணங்கள் ஆகியன பயன்பாட்டில் உள்ளன. மேலும், மேற்கூரையுடன் கூடிய வாகன பார்க்கிங் வளாகம்; எக்ஸ் ரே மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் ஆகியனவும், அனைத்து பரிசோதனை ஆய்வுக்கூடங்களும் விரைவில் துவங்கப்படவுள்ளது.மகப்பேறு சிகிச்சை, ஆயுர்வேதம், சித்தா, யுனானி ஆகிய சிகிச்சை முறைகள், இதய வால்வு பரிசோதனை பிரிவு ஆகியன, துறை ரீதியான ஒப்புதல் பெற்ற பின் துவங்கப்படும். மருத்துவமனை வளாகத்தில் ஏ.டி.எம்., மையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.