குறுமைய விளையாட்டுக்கு நிதி ஒதுக்கீடு குறைவு; போட்டிகளை நடத்த அரசு பள்ளிகள் தயக்கம்
உடுமலை; பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடக்கும் குறுமைய விளையாட்டுகளுக்கு, நிதிஒதுக்கீடு குறைவாக இருப்பதால், போட்டிகளை எடுத்து நடத்த அரசு பள்ளிகள் தயங்குகின்றன.குடியரசு தின விழா மற்றும் பாரதியார் தினவிழாவையொட்டி, கல்வித்துறையின் சார்பில் குறுமைய விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, குழு மற்றும் தனி விளையாட்டு போட்டிகள், தடகளப்போட்டிகள் நடத்தப்படுகிறது.ஒவ்வொரு குறுமையத்திலும் பள்ளிகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது. குறைந்தபட்சம் ஒரு குறுமையத்தில், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.போட்டி நடக்கும் இடங்களில், மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, விளையாடி களைத்த மாணவர்கள் ஓய்வெடுக்க நிழற்பந்தல், முதலுதவி செய்வதற்கான மருத்துவ வசதிகள் அமைக்க வேண்டும்.போட்டிகளை நடத்த வருவோருக்கான ஊதியம், மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வாங்குதல் உள்ளிட்ட அனைத்தும், அரசு வழங்கும் நிதியில் பயன்படுத்த வேண்டும்.2013ம் ஆண்டுக்கு முன்பு வரை, இப்போட்டிகளை நடத்த அரசின் சார்பில் மிக குறைந்த தொகை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால், தனியார் பள்ளிகள் போட்டிகளை எடுத்து நடத்தி வந்தன.அதன் பின், அரசு பள்ளிகள் ஏற்று நடத்துவதற்கு, ரூ. 90 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பத்தாண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும், தற்போதைய பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் போட்டிகளை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை.கடந்தாண்டில் ஒரு குறுமையத்துக்கு, ரூ. 94 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு பற்றாக்குறையால், அரசுப்பள்ளிகள் இப்போட்டிகளை ஏற்று நடத்த தயக்கம் காட்டுகின்றன.அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:குறுமைய அளவில் போட்டிகளை நடத்துவதற்கு, சராசரியாக இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், அரசு 94 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்குகிறது. போட்டிகளை ஒருங்கிணைப்பது முதல், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி நிறைவு செய்வது வரை, பல்வேறு செலவினங்கள் உள்ளன.அரசுப்பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களின் சொந்த செலவில் தான் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்வது, அவர்களை தயார்படுத்தவும் செய்கின்றனர்.இந்நிலையில், போட்டிகளை நடத்துவதற்கும் நிதி குறைவாக இருக்கும் சூழலில், அரசு பள்ளிகள் பின்வாங்குகின்றன.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான், வேறு வழியில்லாமல் போட்டிகளை நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. போட்டிகளை நிறைவாக நடத்துவதற்கு கூடுதல் நிதிஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.