| ADDED : நவ 27, 2025 05:07 AM
திருப்பூர்: திருப்பூர், முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்ட ரோடு, இரண்டே நாளில், படுமோசமாகி பழைய நிலைக்கு சென்றது. திருப்பூர், முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் யூனிட் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ரோடு படுமோசமாக உள்ளது. ரோட்டின் நிலைமையால் விபத்து அடிக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால், ரோட்டை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதனால், வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி சாலைகள் மேம்படுத்துதல் திட்டத்தில் பிரதான ரோட்டை சீரமைக்க, 8.37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினர். ஆனால், பணிகள் துவங்காமல் இருந்தது. இதனால், காங்கயம் ரோடு பிரிவிலிருந்து ஹவுசிங் யூனிட் மானுார் பிரிவு வரை, 2.5 கிலோ மீட்டர் மோசமான ரோட்டை சீரமைக்க கலெக்டர் அலுவலகத்திலும் அப்பகுதி மக்கள் சார்பில், புகார் மனு அளித்தனர். மக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக கடந்த, 22 மற்றும் 23ம் தேதி என, இரு நாள் ஹவுசிங் யூனிட் பகுதியில் மோசமான இடத்தில் 'பேட்ஜ் ஒர்க்' செய்யப்பட்டது. இந்த வேலையை 'கடமைக்கு' செய்து சென்றனர். இதன் காரணமாக, இரு நாட்களில் ரோடு பழைய நிலைக்கே திரும்பியது. பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்ட ரோடு, தற்போது ஜல்லி கற்களால் சிதறி கிடக்கிறது. வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் நிலையில் உள்ளனர். எனவே, ஒதுக்கப்பட்ட நிதியில் உரிய முறையில் செலவு செய்து, முறையாக ரோட்டை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.