மீண்டும் மீண்டும் பழுதாகும் ரோடு; லட்சுமி நகர் பொதுமக்கள் வேதனை
திருப்பூர்; லட்சுமி நகர், 50 அடி ரோட்டில் தொடர்ந்து சீரமைப்பு பணி மேற்கொண்டும், ரோடு பழுதாவதும் தொடர்கதையாக உள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதி முக்கியமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அமைந்துள்ள பகுதி. பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் முக்கியமான ரோடாக இப்பகுதி அமைந்துள்ளது. இதில், 50 அடி ரோடு பிரதான வழித்தடமாக உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டில் பல இடங்கள் குண்டும் குழியுமாக உள்ளது.இவற்றுக்கு 'பேட்ஜ் ஒர்க்' போட்டாலும், ஓரிரு நாட்களுக்குள் மீண்டும் பழுதாகி விடுகிறது. இந்த ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ரோடு தொடர்ந்து பழுதாவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இப்பகுதியில் சீரமைப்பு பணி செய்து ரோடு பேட்ச் ஒர்க் செய்தாலும் குழிகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.அப்பகுதியினர் கூறுகையில், 'இந்த ரோட்டில் அதிகளவிலான வாகனங்கள் சென்று வருகிறது. தனியார் ஒருவர் வாகனங்களுக்கு தண்ணீர் நிரப்பி விற்பனை செய்கிறார். இங்கு வரும் வாகனங்களால் ரோட்டில் தண்ணீர் சிந்துவதும், ரோடில் தேங்கி நின்று ரோடு சேதமடைவதும் தொடர்ந்து நடக்கிறது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.