மண் விற்பனையா? பா.ஜ., போராட்டம்
அவிநாசி; திருமுருகன் பூண்டி நகராட்சியில் நல்லாறு ஓடை செல்லும் ரோட்டோரம் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நடந்த பணிகளுக்காக தோண்டப்பட்ட மண்ணை கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளனர்.நல்லாறு ஓடை செல்லும் ரோட்டில் புதிதாக தார் சாலை போடப்பட்டது. பக்கவாட்டில் இருந்த மண்ணை முறைகேடாக அள்ளி அருகில் உள்ள தனியார் இடத்தில் கொட்டி வைத்து விற்பதாக பா.ஜ.,வினருக்கு தகவல் கிடைத்தது.திருமுருகன்பூண்டி நகர பா.ஜ., தலைவர் சண்முகபாபு, தலைமையில், பொதுச் செயலாளர் சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் மண்ணை அள்ளிய பொக்லை இயந்திரத்தை சிறைபிடித்தனர். அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் ஒப்பந்த நிறுவன ஊழியர்களை அழைத்து விசாரித்தனர்.வேறு இடத்தில் நடைபெறும் வேலைக்காக, மண்ணை கொட்டி சமன்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் முன்பு கொட்டப்பட்ட மண்ணை அள்ளுவதாக தெரிவித்தனர். தற்போது அள்ளப்பட்டுள்ள இடத்தில் போடப்பட்டுள்ள ரோடு உயரமாக உள்ளதால் பக்கவாட்டில் பள்ளம் ஏற்பட்டு டூவீலர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.கொட்டப்பட்டுள்ள மண்ணை ரோடு மட்டத்திற்கு சமன்படுத்தி தர ஒப்பந்த நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து பா.ஜ.,வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.