பக்ரீத் சிறப்பு தொழுகை திரளான இஸ்லாமியர் பங்கேற்பு
திருப்பூர்: பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடத்தி, இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத், நேற்று அனைத்து பகுதிகளிலும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பள்ளி வாசல்கள், திறந்த வெளிதிடல்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. புத்தாடை அணிந்தும், இனிப்பு மற்றும் உணவு வகைகள் வழங்கியும் இஸ்லாமியர்கள் பண்டிகையை கொண்டாடினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.திருப்பூர் மாவட்டம் முழுவதும், பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது; திரளானோர் பங்கேற்றனர். பல்வேறு பள்ளி வாசல்களிலும் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று பக்ரீத் உரை நிகழ்த்தினர்.திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், நொய்யல் வீதி பள்ளி வாசல் திடலில் தொழுகை நடைபெற்றது. ஆண், பெண்கள் திரளாக பங்கேற்றனர். அதன் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் பக்ரீத் உரை நிகழ்த்தினார். மாவட்டம் முழுவதும், 30 இடங்களில் கிளைகள் சார்பில், உரிய பகுதி பள்ளி வாசல் மற்றும் சில திடல்களில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது. திருப்பூர் கோம்பைத்தோட்டம், பெரிய தோட்டம், மங்கலம், அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நடைபெற்ற பக்ரீத் தொழுகைகளிலும் திரளானோர் கலந்து கொண்டனர்.