ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து சட்ட திருத்தம் வேண்டும்
பல்லடம்: தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம், பல்லடம் வடுக பாளையத்தில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வுக்கு பாதகமாக உள்ள, 243 அரசாணையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, கடந்த ஜூன் மாதம் முதல் வழங்கப்படாமல் இருக்கும் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். பணியில் இருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்பதை ரத்து செய்யும் முன்மொழிவை, பாராளுமன்றத்தில் சட்ட திருத்தமாக கொண்டு வர வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாவட்ட பொருளாளர் தமிழ்வண்ணன், வரவு செலவு நகலை சமர்ப்பித்தார். மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகவேல், முன்னாள் மாநில துணைத்தலைவர் கனகராஜ், மாநிலத் துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர். மகளிர் அணி செயலாளர் காஞ்சனா தேவி நன்றி கூறினார்.