மகளுக்காக மாறியது வாழ்க்கை; இதயபூர்வ நம்பிக்கையுடன் பெற்றோர்
பெண் குழந்தை என்றாலே பெற்றோர் அதீத பாசத்தோடு, தங்கள் வீட்டு மகாராணியாக வளர்க்கின்றனர். திருப்பூர், ரங்கநாதபுரத்தை சேர்ந்த தாண்டவக்கோன் - ராஜேஸ்வரி தம்பதியரோ, தங்கள் வாழ்க்கையையே மகளுக்காக அர்ப்பணித்து வாழ்கின்றனர்.இவர்களது மூத்த மகளான இருதய லட்சுமி, கல்லுாரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது, மூளை காசநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், மகளை எப்படியும் இந்த பாதிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்ற மன உறுதியோடு, பெற்றோர் இருவரும் போராடி வருகின்றனர்.தாண்டவக்கோன் மனம் திறந்து பேசியதாவது:திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்தேன். இருதய லட்சுமி, கடந்த 2015, டிசம்பர் மாதம் மூளை காச நோயால் பாதிக்கப்பட்டார். ஒரு பொம்மை போன்று, படுத்த படுக்கையாகிவிட்டார்.பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளித்தும், மகளால் நடமாட முடியவில்லை. துக்கத்தில் தடுமாறினாலும், அதன்பிறகு எங்கள் பார்வையை, சிந்தனையை மாற்றினோம்.சிறுவயதில் எப்படியெல்லாம் விளையாடுவாள் என கடந்த காலத்தை நினைத்தாலோ; 20 வயதாகும் அவளின் வாழ்க்கை என்னாகும் என எதிர்காலத்தை நினைத்தாலோ கவலைகள் சூழ்ந்து, வேகம் குறைந்துவிடும். கடந்த காலத்தையும், எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை சுருக்கிக்கொண்டோம். கண் சிமிட்டலே பாைஷ
இன்றைய பொழுதில், மகளை மீட்க என்னவெல்லாம் செய்யலாம் என ஆராய்ந்து, செயல்படுத்து கிறோம். பசி, வலி என எதையும் அவளின் கண் சிமிட்டல் மூலம் அறிந்து கொள்கிறோம். ஒரு முறை கண் சிமிட்டினால் வேண்டும், ஆம் என்பதாகவும்; இரண்டுமுறை சிமிட்டினால் வேண்டாம், இல்லை என்பது போன்ற பாசையில் அவளுடன் பேசுகிறோம்.எளிதில் ஜீரணமாகும், சத்துக்கள் நிறைந்த சிறுதானிய உணவுகளை கொடுக்கத்துவங்கியபிறகு அவளது உடல் நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழத்துவங்கின. பொருளாதார நெருக்கடி
மகளின் மருத்துவ செலவுகளால் ஒரு கட்டத்தில் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டோம். மீண்டும் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்லலாம். ஆனால், மகளை கவனித்துக்கொள்ள முடியாது.தொழில் செய்யவேண்டும் அதேநேரம் மகளையும் கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில், மனைவியும் நானும் சேர்ந்து, சிறுதானிய உணவு விற்பனையை துவக்கினோம். ராகி களி, உளுந்து புட்டு, வரகு, தினை, குதிரைவாலி இட்லி, தோசை உணவுகளை தயாரித்து டோர் டெலிவரியாக விற்பனை செய்கிறோம்.எனது மனைவி, மகளுக்கு தயாரிப்பது போலவே சிறுதானிய உணவுகளை சமைத்து தருகிறார். நான் அவற்றை ஆர்டரின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்கிறேன். எங்கள் சிறுதானிய உணவுக்கு நிரந்தர வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவிட்டது.நடைபோட துவங்கிய மகள்''மகள் இருதய லட்சுமியிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கம்பு ஊன்றி மற்றவர்களின் துணையுடன் மெல்ல நடைபோட துவங்கியிருக்கிறாள். இந்த நோய் பாதிப்பிலிருந்து அவள் நிச்சயம் ஒருநாள் முழுமையாக மீண்டுவிடுவாள். அப்படி அவள் நோய் பாதிப்பிலிருந்து விடுபடும்போது திறம்பட செயல்பட வேண்டுமல்லவா? அதனாலேயே, அவளது கைகள், கால்களுக்கு தனி பயிற்சி அளித்துவருகிறோம்'', என்றார் தந்தை தாண்டவக்ேகான்.