அஞ்சல் துறை பெயரில் லிங்க் பணம் பறிக்க பலே திட்டம்
திருப்பூர்:திருப்பூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர், தன் மனைவி பெயரில் ஆன்லைன் வாயிலாக சில புத்தகங்கள் ஆர்டர் செய்துள்ளார். 'முகவரி தெளிவாக இல்லை; அதை உறுதிப்படுத்தி, பார்சலை டெலிவரி செய்ய கட்டணம் செலுத்த வேண்டும்' என, அவருக்கு 'வாட்ஸாப்' தகவல் வந்தது.'இந்தியா போஸ்ட்' என்ற பெயரில் வந்துள்ள தகவலில் இடம் பெற்ற லிங்க்கில், பணம் அனுப்ப முயற்சித்த போது, அதில் யு.எஸ்., டாலர் என்ற மதிப்பில் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.அவர் தன் கணக்கிலிருந்து, லிங்க்கில் பணம் அனுப்ப முயன்ற போது, வங்கி விதிமுறைகள்படி, அந்த பரிமாற்றம் வங்கி தரப்பில் நிறுத்தப்பட்டது.கண்ணன் கூறுகையில், ''புத்தகம் ஆர்டர் செய்த இ-மெயில் முகவரி மற்றும் வாட்ஸாப் எண்ணுக்கு இந்த தகவல் வந்தது. இந்தியா போஸ்ட் என்ற பெயரில் இருந்ததால், ஆர்டர் செய்தது தான் என்பதால், சந்தேகப்படாமல் லிங்க்கில் பணம் அனுப்ப முயன்றேன்.''பின்னர் தான், இது மோசடி என தெரியவந்தது. ஆனால், வங்கி பரிவர்த்தனை, 20,000 ரூபாய்க்கு மேல் முடியாது என்பதால், 84,000 ரூபாய் பணம் தப்பியது,'' என்றார்.