சமூகத்தின் அங்கமாக உயர்த்தும் இலக்கியம்
திருப்பூர்; ''சமூகத்தில் ஓர் அங்கமாக விளங்க இலக்கியம் பெரிதும் பயன்படுகிறது,'' என, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் தனப்பிரியா பேசினார்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியின், தமிழ் உயராய்வுத்துறை சார்பில், சிறப்பு கருத்தரங்கு நடந்தது. இளங்கலை மாணவியரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. முனைவர் பட்ட ஆய்வாளர் அபிேஷகா வரவேற்றார். கல்லுாரியின் முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் முனைவர் பாலசுப்பிரமணியன் பேசினர். சிறப்பு விருந்தினராக, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை கல்லுாரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் தனப்பிரியா பங்கேற்றார்.கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் பேசுகையில்,''மக்களின் வாழ்வியல் விளைச்சல் இலக்கியம். இலக்கியத்தின் ஊடாக, மனித வாழ்வியலை பண்படுத்துவதாக அமையும். கதைத்தல் என்பது பேசுதலை குறிக்கும். இலக்கியம் கதைத்தல் மூலம் வாழ்வியல் சிறக்கும்,'' என்றார்.உதவி பேராசிரியர் தனப்பிரியா பேசுகையில்,''இலக்கியம் என்பது படைப்பாளிகளின் வாழ்வியல் தொகுப்பு. சமூகத்தில் ஓர் அங்கமாக விளங்க இலக்கியம் பெரிதும் பயன்படுகிறது. படைப்பு என்பது நாம் கண்டு உணர்ந்ததில் இருந்து சமூக சூழலுடன் வெளிப்படுவது. படைப்பாளன் ஒரு திறனாய்வாளனாக, வலம் வருபவராகவும் இருக்கிறான். வாழ்வின் வெற்றிக்கு இலக்கியம் மிக அவசியம்; இதற்கு உந்துசக்தியாக அமைய, வாசிப்பு மிகமிக அவசியம்,'' என்றார். முனைவர் பட்ட ஆய்வாளர் கிரிஜா நன்றி கூறினார்.