தாழ்வாக உயர் மின்னழுத்த கம்பி; கனரக வாகனங்களுக்கு சிக்கல்
திருப்பூர்; திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) விஜயேஸ்வரன் தலைமை வகித்தார்.செயற்பொறியாளர் (பொ) சண்முகசுந்தரம் வரவேற்றார். மின்நுகர்வோர், விவசாய சங்க பிரதநிதிகள் மனுக்களை வழங்கினர்.மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் பொன்னுசாமி அளித்த மனு:திருப்பூர், மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே, சிறுபாலங்கள் அமைத்து, ரோடு இரண்டு அடி அளவுக்கு உயர்த்தப்பட்டது. ரோட்டின் இடதுபுறம், மின்கம்பியும், உயரழுத்த மின்கம்பியும் செல்கின்றன. சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே ரோடு உயர்த்தப்பட்டதால், கனரக வாகனங்கள் சின்னாண்டிபாளையத்துக்கு வர முடிவதில்லை.மின் கம்பி உரசி விபத்து ஏற்படுமென்ற அச்சத்தில், குளத்துக்கடை ரோடு வழியாக, கனரக வாகனங்கள் செல்கின்றன. எனவே, சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே, மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் கொடுத்த மனு: திருப்பூர், 15 வேலம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, பிச்சம்பாளையம் பீடரில், மின்கம்பிகள் உரசி, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. துணை மின் நிலையம் பின்னால் செல்லும் கம்பிகளால், பிச்சம்பாளையம், ராஜா நகர் சுற்றுப்பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.பிச்சம்பாளையம் - போயம்பாளையம் இடையே உள்ள முனியப்பன் கோவில் பாலம் அருகில், கம்பிகள் உரசி, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே, தாழ்வாக செல்லும் உயரழுத்த கம்பி களை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.