44 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கொள்முதல் எளிதாக இருப்பதால் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர்; சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், உடுமலை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில், மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 'மாவட்டத்தில், 44 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோள சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது' என, வேளாண் துறையினர் கூறுகின்றனர். மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், மக்காச்சோள சிறப்பு தொகுப்பு மற்றும் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (தானியங்கள்) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில், விதை, உயிர் உரம், நானோ யூரியா மற்றும் இயற்கை இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. சின்ன வெங்காயம் உள்ளிட்ட பிற பயிர் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் கூட, மக்காச்சோள சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர். இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. இந்த சாகுபடியில் பராமரிப்பு குறைவு; குறைந்தளவு நீர் இருந்தால் போதும். களையெடுக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, களைக்கொல்லி அடித்தால் போதும். குறிப்பாக, மக்காச்சோளம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் கால்நடை தீவனத்துக்கென தோட்டத்தில் இருந்து, தட்டுடன் சேர்த்தே மக்காச்சோள பயிரை பச்சையாக வெட்டி எடுத்து சென்று விடுகின்றனர். விவசாயிகளுக்கு உடனடியாக தொகையையும் கொடுத்து விடுகின்றனர். குவின்டாலுக்கு, 2,200 முதல், 2,400 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. மக்காச்சோளம் கொள்முதல் செய்யும் கால்நடை தீவன தயாரிப்பு ஆலைகள், கால்நடை தீவன தயாரிப்புக்கு போக, எஞ்சிய மக்காச்சோளத்தை 'எத்தனால்' தயாரிப்புக்கும் அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.