சிரிக்க வையுங்கள்; சீண்டிப் பார்க்காதீர்கள்
திருப்பூர்; நகைச்சுவை முற்றம், விவேகானந்த சேவாலயம் சார்பில், 'சிரிப்போம்... சிந்திப்போம்' என்ற சிரிப்பு விழா, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.நகைச்சுவை முற்றம் பொது செயலாளர் முரளி வரவேற்றார். 'பிரித்வி இன்னர் வேர்ஸ்' நிர்வாக இயக்குனர் பாலன் தலைமை வகித்தார். ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் நிறுவனர் செந்தில்நாதன், அறங்காவலர் ஜோதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.'மனிதா நீ மகத்தானவன்' என்ற தலைப்பில், முனைவர் தத்தாத்ரேயன் பேசுகையில்,'' அமெரிக்கா சென்று விவேகானந்தர் பேசிய பிறகுதான், நமக்கு நன்மதிப்பு கிடைத்தது. தன்னை தானே தாழ்த்திக்கொள்வது மிகப்பெரிய பாவம். மகான்கள், முனிவர்கள் தியாகத்தால் இன்று மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்,'' என்றார்.'சிரிக்கும் குதிரையில் சிந்தனை பயணம்' என்ற தலைப்பில், ஆன்மிகச் சொற்பொழிவாளர் மணிகண்டன் பேசியதாவது:வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுடன், தினமும் அரைமணி நேரம் அமர்ந்து பேசி, சிரிக்கும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.பத்து நபர்கள் இருக்கும் இடத்தில், அருகில் இருக்கும் நபர்களை சிரிக்க வைக்க வேண்டும்; சீண்டி பார்க்க கூடாது. 'இந்தியாவின் ஆன்மாதான் ஆன்மிகம்' என்று விவேகானந்தர் கூறியுள்ளார்; ஆன்மிகத்தை வளர்க்க வேண்டும்.ஊசியின் காதில் நுால் புகுந்தால், சட்டை கிழிசல் சரியாகும்; ஒருவன் காதுக்குள் நல்ல நுால்கள் புகுந்தால், மனதின் கிழிசல் சரியாகும். ஒவ்வொருவரும், தினமும், 1,316 முறை, தங்களது 'மொபைல்' போன்களை பார்க்கிறோம். குழந்தைகள், மொபைல் போனுடன் அதிக நேரம் செலவிட அனுமதிக்க கூடாது. வீட்டில் உள்ள முதியோர்களையும், பெற்றோரையும் முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.நகைச்சுவை முற்றத்தின் பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார்.