வங்கதேச ஆடை இறக்குமதிக்கு தடை எதிரொலி திருப்பூரை நோக்கி நகரும் உற்பத்தி ஆர்டர்கள்
வங்கதேச ஆடைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பிறகு, உள்நாட்டு சந்தைகளில் இருந்து, புதிய உற்பத்தி ஆர்டர்கள் திருப்பூருக்கு வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.இந்தியாவில் இருந்து, முக்கிய மூலப்பொருளான பருத்தியை இறக்குமதி செய்து கொள்ளும் வங்கதேசம், துணி மற்றும் ஆடைகளை தயாரித்து, இந்தியாவுக்கே இறக்குமதி செய்து, மறைமுக நெருக்கடி ஏற்படுத்தியது. உள்நாட்டு சந்தையில் கடும் போட்டியாக மாறியதாக, தொழில்துறையினர் புலம்பிய பிறகும், வங்கதேச ஆடை இறக்குமதிக்கு அதிகப்படியான கட்டுப்பாடு விதிக்கவில்லை.சிறிய நாடான வங்கதேசத்தின் நலன் கருதி, வளர்ந்த நாடுகள் பல்வேறு வகையில் உதவுகின்றன. இந்தியாவும், வங்கதேசத்துடன் வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அந்நாட்டுக்கான பருத்தி ஏற்றுமதியிலும், அந்நாட்டில் இருந்து செயற்கை நுாலிழை துணி மற்றும் ஆடைகள் இறக்குமதியிலும் அதிக சலுகை வழங்கப்பட்டது. 'கவுன்டர்வெய்லிங்' வரி
வங்கதேச ஆடை இறக்குமதியால் பாதிப்பு ஏற்படும் என்பதால், 'கவுன்டர் வயலிங்' என்ற கட்டுப்பாட்டு வரி விதிக்கப்பட்டது. இதன்மூலம் வங்கதேச ஆயத்த ஆடை இறக்குமதிக்கு 12 சதவீதம் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த, 2017 ல் ஜி.எஸ்.டி., அறிமுகமான போது, 'கவுன்டர் வயலிங்' வரி தள்ளுபடியானது.பூஜ்ய வரி காரணமாக, வங்கதேச ஆடைகள் அபரிமிதமாக நமது நாட்டில் இறக்குமதியாகின. உற்பத்தி செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், உள்நாட்டு முன்னணி 'பிராண்ட்' நிறுவனங்கள் அனைத்தும், வங்கதேசத்தில் ஆடை உற்பத்தி செய்து, இறக்குமதி செய்து கொண்டன. நடவடிக்கை பாய்ந்தது
மத்திய அரசு, வங்கதேசத்தில் இருந்து தரைவழி போக்குவரத்து வாயிலாக, ஆடை இறக்குமதி செய்ய, கடந்த வாரம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது, உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் மட்டுமல்ல, ஏற்றுமதியாளர்களுக்கும் புதிய வாய்ப்பாக மாறியுள்ளது. இதன்மூலமாக, திருப்பூர் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான போட்டி குறைந்துள்ளதுடன், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, 'பிராண்ட்' நிறுவனங்களிடம் இருந்து, ஆர்டர்கள் மீண்டும் வரத்துவங்கியுள்ளன.திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், ''முன்னணி 'பிராண்ட்' நிறுவனங்கள், வரி சலுகை கிடைத்ததால், கடந்த, ஐந்து ஆண்டுகளாக, வங்கதேசத்துக்கு ஆர்டர் கொடுத்து, உள்ளாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி செய்து வந்தன. இதனால், உள்நாட்டு நிறுவனங்களுக்கான வர்த்தக வாய்ப்புகள் குறைந்தது. வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது, 'பிராண்ட்' நிறுவனங்கள், திருப்பூரில் உள்ள நிறுவனங்களிடம் ஆர்டர் வழங்க, அதிக அளவு வர்த்தக விசாரணை நடத்தி வருகின்றனர்,'' என்றனர்.உள்நாட்டு சந்தை வாய்ப்பு பறிபோனதுடன், 'ஜாப் ஒர்க் ' நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்பும் குறைந்தது. வேலை வாய்ப்பு குறைந்து போனதால் சோர்ந்திருந்த 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு மீண்டும், அதிக ஆர்டர்கள் கிடைக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.