மேலும் செய்திகள்
குறுங்காடாக மாறும் வட்டமலைக்கரை ஓடை அணை
07-Sep-2024
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, வெற்றி அறக்கட்டளை சார்பில், 'சாலைகளும் சோலையாகட்டும்' என்ற திட்டத்தில் நேற்று பூச்செடிகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டம் முழுவதும், மரக்கன்று நட்டு வளர்ப்பது ஊக்குவிக்கப்படுகிறது. தண்ணீர் வசதியுள்ள நிலங்களை தேர்வு செய்து, மரக்கன்று நட்டு கொடுக்கப்படுகிறது. நில உரிமையாளரும், பயனுள்ள மரங்களை வளர்த்து வருகின்றனர்.இத்திட்டத்தில், 2015ம் ஆண்டு முதல், இதுநாள் வரை, 19 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. 500க்கும் அதிகமான இடங்களில், அதிக எண்ணிக்கையிலான மரங்களை நட்டு, குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன், மூங்கில் பூங்கா, மூலிகை பூங்கா என, பல்வேறு சாதனைகளும் நடந்துள்ளன.இந்நிலையில், மாநகராட்சியுடன் இணைந்து, 'சாலைகளும் சோலையாகட்டும்' என்ற திட்டத்தில், ரோட்டின் மையத்தில், அலங்கார பூச்செடிகள் நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வெள்ளியங்காடு முதல், அரசு மருத்துவக்கல்லுாரி ரோடு வரையில், 1.50 கி.மீ., துாரத்துக்கு நேற்று பூச்செடி நடப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், காகித பூ செடிகளை நடும் பணியை துவக்கி வைத்தார். மாநகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் பசுமை பயணத்தை விளக்கினார்.நிகழ்ச்சியில், நாச்சியார் பாடசாலையை சேர்ந்த பாலசுப்பிரமணியன், காந்திமதி, சிவசரண்யா, யுவராஜ்பிரபு, சரண்யா, மகேஸ்வரன் மற்றும் எலவந்தி சிவசுப்பிரமணியம் ஆகியோர், அலங்கார பூ செடிகளை நட்டு வைத்தனர். நேற்று நடப்பட்ட பூ செடிகளை, தண்ணீர்விட்டு பராமரிக்கும் பொறுப்பையும், நாச்சியார் பாடசாலை நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
07-Sep-2024