மேலும் செய்திகள்
'மார்க்கெட் கடை ஏலம்: இடைத்தரகருக்கு இடம் இல்லை'
27-Dec-2024
திருப்பூர், ; 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், திருப்பூர், காமராஜ் ரோடு தினசரி மார்க்கெட் வளாகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு விடப்படவுள்ளது. மார்க்கெட் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பணிகள் நிலவரம் குறித்து விளக்கும் வகையில் நேற்று கூட்டம் நடந்தது.மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி, துணை கமிஷனர் சுந்தரராஜன், உதவி கமிஷனர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் தங்கமுத்து தலைமையில் நிர்வாகிகளும், அழுகும் பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் குமாரசாமி தலைமையில் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.'அனைத்து கடைகளுக்கும் வாடிக்கையாளர் வசதியாக வந்து செல்லும் வகையில் வழித்தடம்; வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி; அடையாள அட்டை வழங்க வேண்டும்.பல்லடம் ரோடு நடைபாதைக் கடைகள் அகற்ற வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.அழுகும்பொருள் வியாபாரிகள் சங்கத் தரப்பில், கடைகளுக்கு தனி மின் இணைப்பு, குடிநீர் வசதி, காட்டன் மார்க்கெட் கடைகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு வாடகை தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், வரும் 30ம் தேதி, வளாகத்தில் நேரடியாக பொறியியல் பிரிவு அலுவலர்களுடன் சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் கடைகள் அளவீடு செய்து, வாடகை நிர்ணயம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
27-Dec-2024