நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பல்லடம்; பல்லடம் கடை வீதியில், வணிகர் சங்க பேரமைப்பு கூட்டம், மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பேரமைப்பின் ஆலோசகர் அண்ணாதுரை வரவேற்றார்.இதில், மாவட்ட செயலாளர் கணேசன் பேசியதாவது:பல்லடம் கடைவீதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பார்க்கிங் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, நகராட்சியில் தனிநபர் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து நகராட்சி நேரடியாக விசாரணை மேற்கொள்ளாமல், புகார் அளித்த நபருடன் சமரச பேச்சு வார்த்தை நடத்துமாறு கூறியது. இதன்படி சம்பந்தப்பட்ட நபரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வணிகரிடம், புகார் அளித்தவர், 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தார்.இது தொடர்பாக, பல்லடம் போலீசில் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிரட்டல் விடுத்த நபருக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் இருப்பதாக சந்தேகம் உள்ளது. எனவே தான், போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். பல்லடம் நகரப் பகுதியில் உள்ள ஆவின் பாலகங்களில் அனைத்து விதமான பொருட்களும் விற்பனை செய்யப்படுவதால், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.இதற்குப் பின்புலமாகவும் ஆளுங்கட்சியினர் இருந்துகொண்டு கடைகளில் வசூலித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தின் தவறான வழிகாட்டுதல், ஆளும்கட்சியினரின் துாண்டுதல் மற்றும் மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.