குறு, சிறு தொழில் முதலீட்டு மானிய திட்டம்; தொழில் முனைவோருக்கு 25 சதவீதம் கிடைக்கும்
திருப்பூர்; நீடித்த நிலையான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், 25 சதவீதம் சிறப்பு முதலீட்டு மானியமாக, அதிகபட்சம் 1.50 கோடி ரூபாய் வழங்கும் திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.இத்திட்டம், 2021ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது, மாசற்ற மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும், 16 துறை நிறுவனங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகை தேர்வு தொழில் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.'த்ரெஸ்ட் செக்டார்' என்ற தமிழக அரசு தேர்வு தொழிலின் சிறப்பு தொழில்துறை பட்டியல்; இதில் முதலீடு செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. இதில், 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்கப்படும்; தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில், 25 சதவீதம்; அதிகபட்சமாக, 1.50 கோடி ரூபாய் வரை வழங்கப்படும்.மின் மற்றும் மின்னணு தொழில், தோல் மற்றும் தோல்பொருள் தொழில், ஆட்டோ பாகங்கள்; மருந்து மற்றும் ஊட்டச்சத்து மருந்து; சூரிய ஆற்றல் உபகரணங்கள், மாசுக்கட்டுப்பாட்டு கருவி, மின்சார வாகன கூறுகள், மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் மருத்துவ ஜவுளி என, 24 வகையான தொழில்கள் துவங்க மானியம் கிடைக்கும்.மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் துணி மற்றும் ஆடை உற்பத்தி, இயற்கை இழைகளால் உருவாக்கப்பட்ட துணி மற்றும் ஆடை, மறுசுழற்சி பொருளில் இருந்து உற்பத்தியாகும் பொருட்கள், சுற்றுச்சூழல் பாதிக்காத மாசற்ற வண்ண பூச்சுகள், 'பயோகாஸ்' ஜெனரேட்டர், இயற்கை இழை விரிப்புகள் மற்றும் தரை விரிப்புகள், மக்கும் டயாபர் மற்றும் சானிடரி 'நாப்கின்கள், மரப்பொம்மைகள், நீடித்த மற்றும் நிலையான பாதணிகள், இயற்கை அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தி தொழிலுக்கும், முதலீட்டு மானியம் பெற்று பயன்பெறலாம்.ஆடிட்டர்கள் கூறுகையில்,'வகைப்படுத்தப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு முதலீட்டு மானியம் மூலம், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகிறது. மாசற்ற மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் தயாரிப்புகளை உற்பத்தி செய்து, உலக சந்தையில் போட்டியிட ஊக்குவிப்பாக இருக்கும். நிலையான தொழில் வளர்ச்சி பாதையில் பயணித்து, தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உயர்த்தும்,' என்றனர்.