குளம் மேம்பாட்டு பணி தீவிரம்; நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
உடுமலை:இழுபறியாக இருந்த வெஞ்சமடை குளம் மேம்பாட்டு பணிகள், மீண்டும் நகராட்சி நிர்வாகத்தால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடுமலை - பழநி ரோடு வெஞ்சமடை பகுதியில், பி.ஏ.பி., கால்வாய் அருகே, குளம் உள்ளது. பராமரிப்பு இல்லாமல், கழிவு நீர் தேங்கியும், புதர் மண்டியும் அடையாளத்தை இழந்து காணப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் தன்னார்வ அமைப்பினர் ஒருங்கிணைந்து குளத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், நீர் நிலைகள் மீட்கும் திட்டத்தின் கீழ், உடுமலை நகராட்சி சார்பில், 35 லட்சம் ரூபாய் கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கான்கிரீட் மற்றும் கருங்கற்கள் அடுக்கி கரை அமைத்தல், பூங்கா, நடைபாதை உள்ளிட்ட பணிகள் துவங்கி, சில மாதங்களில், கிடப்பில் போடப்பட்டது. தற்போது நகராட்சி சார்பில், மேம்பாட்டு பணிகள் மீண்டும் தீவிரமாக நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.