நினைவு அரங்கத்தில் அருங்காட்சியகம் முதல்வருக்கு வலியுறுத்தல்
உடுமலை: திருமூர்த்திமலையிலுள்ள எத்தலப்பர் நினைவு அரங்கத்தில், தொல்லியல் சின்னங்களை உள்ளடக்கிய அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உடுமலை அருகே தளியை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்த பாளையக்காரர் எத்தலப்பர். இவரது வம் சாவளியினர், நாட்டின் சுதந்திரத்துக்காக, ஆங்கிலேயே அரசுக்கு எதிராக போரிட்டனர். நாட்டின் சுதந்திர போராட்ட வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழக அரசு, எத்தலப்பருக்கு உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில், அவரது முழு உருவச்சிலை அமைக்கப்பட்டது. திருமூர்த்திமலையில், மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பருக்கு நினைவு அரங்கம் அமைக்க, 2.60 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. பணிகள் நிறைவு பெற்று, அக்., 2024ல், நினைவு அரங்கம் திறக்கப்பட்டது. பெரிய கூட்ட அரங்கு, உணவு அரங்கு, இருப்பு அறை, மேடை என பல்வேறு கட்டமைப்புகளுடன் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், அரங்கம் எத்தகைய பயன்பாட்டுக்கு விடப்படும் என தெரியாமல் காட்சிப்பொருளாக மாறி வருகிறது. இந்த அரங்கத்தை தளி பேரூராட்சி நிர்வாக பராமரிப்பில் விட்டு, விசேஷங்கள் நடத்துவதற்கான வாடகை நிர்ணயிக்கப்படும் என செய்திவளர்ச்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு, பல மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விழிப்புணர்வு இல்லை சுதந்திர போராட்ட வீரரை கவுரவிக்கும் வகையில் அரசு நிதியில் கட்டப்பட்ட நினைவு அரங்கில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உடுமலை சுற்றுப்பகுதிகளில், பல்வேறு தொல்லியல் சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் தொன்மையான பொருட்கள் அழிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது. அமராவதி ஆற்றங்கரை நாகரிகம் மற்றும் பழங்கால பொருட்களை தொல்லியல்துறை வாயிலாக சேகரித்து, எத்தலப்பர் அரங்கத்தில், இடம் ஒதுக்கி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலா பயணியர், இப்பகுதியின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். அரங்கமும் காட்சிப்பொருளாக இருப்பது தவிர்க்கப்படும். இது குறித்து தமிழக முதல்வருக்கு உடுமலை பகுதி யில் இருந்து கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.