துருவங்கள் பொங்கலுார் கொலை சம்பவத்தில் நீடிக்கும் மர்மம்
'எதிரிக்கும் கூட இத்தகைய நிலை வரக்கூடாது,' என்பது தான், பொங்கலுார் - சேமலைக்கவுண்டம்பாளையத்தில் நடந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டது குறித்து பொதுமக்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருந்து வருகிறது. மனிதநேயமற்ற அரக்க குணம் படைத்தவர்களின் நடத்திய கோர தாண்டவத்தின் பின்னணி யார் என்று இதுவரை கண்டறியப்படவில்லை. போலீசாரும், பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை, துருவித்துருவி விசாரித்து வருகின்றனர். இருப்பினும், 'இம்மியளவு' கூட, துப்பு கிடைக்கவில்லை என்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.இப்படி நடந்திருக்கலாம்... அப்படி நடந்திருக்கலாம் என்று பலரும், பல்வேறு யூகங்களை கூறும் வேளையில், இந்த மூன்று பேர் படுகொலையை, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் - நண்பர்கள், போலீசார், பொதுமக்கள் ஆகியோர் தங்கள் பார்வையில், என்ன சொல்கின்றனர்...துருவம் - 1கூட்டு ரோந்து அவசியம்தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைகளை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கண்டறிந்த கைது செய்ய வலியுறுத்தியும், அரசியல் கட்சி, விவசாய அமைப்புகள் தங்கள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ள இவ்வழக்கில், கொலை செய்யப்பட்ட, மூன்று பேருக்கும் குடும்பம், தொழில், நட்பு ரீதியாக எவ்வித முன்விரோதமும் இல்லை. தோட்டத்து வீட்டில் முதிய தம்பதியர் தனியாக இருப்பதை பல நாட்கள் நோட்டமிட்டு யாரோ திட்டமிட்டு வந்திருக்க வேண்டும். அவர்கள் எதிர்பார்த்த பணம், நகை இல்லை என்பதால் கொடூரமாக கொலை செய்து சென்றுள்ளனர் என்றே தெரிகிறது.தோட்டத்து பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளை கும்பல் நோட்டமிட்டு கைவரிசை காட்டுகிறது. இதற்கு முன், காங்கயம், சென்னிமலை, கரூர் போன்ற இடங்களில் தோட்டத்து வீட்டில் நடந்த கொலையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் பிடித்தனர். அவர்கள் ஏதாவது இந்த கொலையில் ஈடுபட்டார்களா என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன் கூட, மடத்துக்குளம் அருகே இதேபோல், தோட்டத்து வீட்டில், நகை, பணத்தை கைவரிசை காட்டிய திருட்டு கும்பலை போலீசார் பிடித்தனர்.குற்றங்களில் ஈடுபடும் கும்பல் குறிப்பாக தோட்டத்து வீட்டையொட்டி சில கிலோ மீட்டரில் நீர்வழிபாதை உள்ளதை தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, தோட்டத்து வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சத்தை போக்கும் வகையில், கூடுதல் ரோந்து போலீசாரை நியமித்து, தோட்டத்து வீடுகள், நீர் வழிப்பாதைகளில் சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்பதை போலீசார் கண்காணிக்க வேண்டும்.எப்படியும் பிடித்து விடுவோம்!
கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க டி.ஐ.ஜி., - எஸ்.பி., கண்காணிப்பில், 14 தனிப்படை மற்றும் கைரேகைகளை ஆய்வு செய்ய, 12 எஸ்.ஐ.,க்களும் நியமிக்கப்பட்டனர். கடந்த, 2011 முதல் தற்போது வரை மாவட்டத்தில் மற்றும் தமிழக முழுவதும் இதுபோன்ற கொடூரமான கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் விவரம் பெறப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.இந்த கொடூர கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க பல கோணங்களில் விசாரணை நடத்தி, மொபைல் போன் டவர் சிக்னல், 'சிசிடிவி' கேமரா பதிவு, சந்தேகப்படும் வாகன நடமாட்டம், கைரேகை என ஒவ்வொரு வகையிலும் கடந்த, 19 நாட்களாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, ஆண்டு இறுதியில் கொடூரமாக கொலையில் ஈடுபடும் ஏதாவது கூலிப்படை, வடமாநில கொள்ளையர்கள் கொலையில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. கொலையாளிகள், 'க்ளவுஸ்' பயன்படுத்தியதால், எந்த ரேகையும் கிடைக்கவில்லை. இந்த கொடூர கொலையில் ஈடுபடுபவர்கள் நோட்டமிட்டு வீட்டில் நுழைந்து பணம், நகைக்காக எதிர்பார்த்து வந்து, ஏமாற்றம் மிஞ்சியதால் கொடூரமாக கொலை செய்திருக்கலாம்.அதே நேரத்தில், தேங்காய் விற்ற பணம் ஆறு லட்சம் ரூபாய் வீட்டில் இருந்து, அந்த பணம் கொள்ளை போகாமல், அவரது தாயார் கழுத்தில் அணிந்திருந்த நகை மட்டும் மாயமானது, கொலையை திசை திருப்ப வைப்பதற்காகவா செய்யப்பட்டதா என்ற சந்தேகமும் உள்ளது. கொலையில் ஈடுபட்ட நபர்கள், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களிடம் தொடர்பில் உள்ள புதிய நபர்கள் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.அதற்கு காரணம், கொலை நடந்த இடம், சுற்று வட்டாரம் என, எந்த இடத்திலும் போலீசாருக்கு எவ்வித தடயமும் இல்லாமல், நன்றாக திட்டமிட்டு கொடூர கொலையை அரங்கேற்றிய காரணத்தால் மட்டும் தான். கொலையில் ஈடுபட்டவர்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற தமிழகத்தையொட்டி உள்ள அண்டை மாநிலங்களில் சேர்ந்த குற்றங்களில் தொடர்பு உடையவர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்ற சந்தேகமும் உள்ளது. எப்படியும் கொலையாளிகளை பிடித்து விடுவோம்.நிம்மதி போய்விட்டது...
சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவரும், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினருமான மூர்த்தி என்பவர் கூறியதாவது:மூன்று பேர் கொலைக்கு பகையா வேறு ஏதேனும் காரணமாக என்பதை போலீசார் கண்டறிய வேண்டும். உள்ளூரில் சின்னச் சின்ன சங்கடங்கள் மட்டுமே இருந்தது. ஆனால், பெரிய பகை இல்லை. போலீசார் குற்றவாளிகளை தேடிக் கொண்டே இருக்கின்றார்கள். சரியான குற்றவாளியை கண்டறிய வேண்டும். தோட்டத்தில் வசிப்பவர்கள் அனைவரும் வெளியில் வரவே பயப்படுகிறார்கள். இரவு பகலாக வேலை செய்த விவசாயிகள் தற்போது காலை, 6:00 மணிக்கு முன் தோட்டத்திற்கு செல்லவே அஞ்சுகிறார்கள்.கொலை நடப்பதற்கு முன் ரோட்டில் ஆங்காங்கே பலர் மது அருந்தி கொண்டு இருந்தனர். தற்பொழுது போலீசார் தீவிர ரோந்து செல்வதால் யாரும் ரோட்டில் மது அருந்துவது இல்லை. ஒரு சம்பவம் நடந்தால் போலீசார் சில நாட்கள் இப்படி ரோந்து செல்வர். இரண்டு மூன்று மாதங்கள் ஆனால் கண்டுகொள்ள மாட்டார்கள். அதன்பின் மீண்டும் இது நடக்கும்.இரவு, 10:00 மணிக்கு மேல் ரோட்டில் நடமாடுபவர்களை போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதற்கு போலீசார் இரவு நேர ரோந்தில் வருடம் முழுவதும் தீவிரம் காட்ட வேண்டும். உண்மையான குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். கொலை செய்ததற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அப்பொழுதுதான் கிராமத்தில் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்.யாரும் சிக்காத வரை, இதற்கு விடை என்பது அனைத்தும் யூகமாகவே இருக்கும். கொலையாளிகளை நெருங்க தனிப்படையினர் பல இடங்களில் முகாமிட்டு இரவு பகலாக இதற்காக போலீசார் கடுமையாக உழைத்து வருகின்றனர். மிகவும் சவாலாக உள்ள இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்து, அனைத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் போலீசார் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்
265 'சிசிடிவி' கேமரா பதிவு ஆய்வு
இதுகுறித்து திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா கூறியதாவது:பொங்கலுார் மூன்று பேர் கொலை வழக்கு தொடர்பாக, 14 தனிப்படையினர் தனித்தனியாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் கடந்த, பத்து ஆண்டுகளில் நிகழ்ந்த பெரிய குற்றப்பின்னணியில் கைது செய்யப்பட்டவர்களின் கைரேகைகளையும் ஒப்பிட்டு பார்த்து வருகிறோம். மூன்று மாவட்ட எல்லைகளில் உள்ள, 18 போலீஸ் ஸ்டேஷன்களிலும், கொடூர குற்றப்பின்னணி உள்ளவர்களின் விவரங்களும் சேகரித்து வருகிறோம். தற்போது, கொலை நடந்த சுற்று வட்டார பகுதியில், 265 'சிசிடிவி' கேமரா பதிவுகளின், 15 நாள் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்கிறோம். கேமரா பதிவு என்பதால், ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இப்பணியை முழு நேரமாக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -