திருப்பூர்: பின்னலாடை தேசிய வர்த்தக மையமாக திருப்பூர் முத்திரை பதிக்க வேண்டும் என்பதற்காக தொழில்துறையினர் தயாராகி வருகின்றனர். திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள், எட்டுக்கும் அதிகமான 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுடன் இணைந்து, சங்கிலி பின்னல் போல் இயங்கி வருகின்றன. தற்போது, பாலியஸ்டர் பின்னல் துணி வரத்தும், அதன் மீதான ஆடை உற்பத்தியும் புதிய சவால்களை உருவாக்கி வருகிறது. பாலியஸ்டர் துணி, வடமாநிலங்களில் இருந்து பெரும்பாலும் தருவிக்கப்படுகின்றன. அதன்மூலம் பல்வேறு 'பிராசசிங்' பணிகளின் தேவை குறைந்துவிட்டது. அதாவது, சாயமிடப்பட்ட துணியாக கிடைப்பதால், துணியை வாங்கியதும், உடனடியாக உற்பத்தி பணியை துவக்க முடிகிறது. இது, குறு, சிறு உற்பத்தியாளருக்கு எளிமையாக இருக்கிறது. இத்தகைய மாற்றம்தான், திருப்பூர் பின்னலாடை தொழிலை, இன்று பல்வேறு வடமாநிலங்களுக்கும் நகர்த்தி சென்றது. பல்வேறு மாநிலங்கள்போட்டி போடும் வடமாநிலங்களில் இருந்து வந்து தொழில் பழகிய தொழிலாளர்கள், சிறிய அளவிலான யூனிட் அமைத்து, குறு, சிறு உற்பத்தியாளராகவும் மாறினர். அதற்கு பிறகு, தங்கள் மாநிலத்துக்கே ஆடை தயாரித்து கொடுக்கும் பணியை துவக்கினர். தற்போது, வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் பாலியஸ்டர் பனியன் துணியை வாங்கி, சொந்த ஊரிலேயே, உற்பத்தி செய்யலாமே என்று தைரியமாக சென்றுவிட்டனர். அந்தந்த மாநில அரசுகளும், தேவையான சலுகைகளை தடையின்றி வழங்கி, ஊக்குவித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால், திருப்பூர் பின்னலாடை தொழில் என்பது, பெரும்பாலான மாநிலங்களில் பிரதான தொழிலாக மாறும்; நாளடைவில், ஏற்றுமதி வர்த்தகத்திலும், பல்வேறு மாநிலங்கள் போட்டியாக கால்பதிக்கும். இந்நிலையை மாற்றியமைக்கவும், தொழிலின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், உற்பத்தி கேந்திரமான திருப்பூர் வர்த்தக மையமாக உயர வேண்டும். அதற்காக, பிரதான தொழில் அமைப்பினர் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். 'யெஸ் இந்தியா கேன்' அமைப்பின் தலைவர்வால்ரஸ் டேவிட் கூறியதாவது: பாலியஸ்டர் துணி வரத்தால், திருப்பூர் பருத்தி பின்னலாடை உற்பத்தியும், வர்த்தகமும் எவ்வகையிலும் பாதிப்பதில்லை. குஜராத், பீஹார், ஆந்திரா உட்பட, பல்வேறு வடமாநிலங்களில், பின்னலாடை தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. அம்மாநில அரசுகளும், அதிகபட்ச சலுகை வழங்கி ஊக்குவிக்கின்றன. பாதிப்பில்லை என்றாலும், திருப்பூரை விட வளர்ந்தால், திருப்பூருக்கான வாய்ப்பு தடைபடும். எனவே, உற்பத்தி நிலையில் தன்னிறைவு அடைந்துள்ள திருப்பூர், வெகுவிரைவில், தேசிய வர்த்தக மையமாக அங்கீகாரம் பெற வேண்டும். அதற்காக, ஒவ்வொரு தொழில் அமைப்புகளுடன் பேசி, திருப்பூரில் பாலியஸ்டர் பின்னலாடை உற்பத்தியை மேம்படுத்துவதுடன், வர்த்தகத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம். எதிர்கால தொழில் நலன்கருதி, 'திருப்பூர் டெக்ஸ்டைல் மார்க்கெட் ஜோன்' என்ற பெருமையை பெற வேண்டும். அதற்கான உதவிகளை, மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும்.