சுவடு இல்லாமல் மறையும் கள்ளிப்பூங்கா பராமரிப்பில் அலட்சியம்
உடுமலை : தமிழகத்தில், முதன்முறையாக அமராவதியில் அமைக்கப்பட்ட கள்ளிப்பூங்கா பராமரிப்பின்றி, பொலிவிழந்து வருகிறது; அரிய வகை செடிகளும் மாயமாகி வருவது இயற்கை ஆர்வலர்களை வேதனையடைய செய்துள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள சுற்றுலா தலமாகும். திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, உடுமலை பகுதியிலுள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.அதன் அடிப்படையில், கடந்த, 2010ல், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி, 3 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அணையையொட்டி கள்ளிப்பூங்கா உருவாக்கப்பட்டது.சுமார், 8 ஆயிரம் சதுர அடியில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச்சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட பல அரிய வகை கள்ளிச்செடிகள் நடவு செய்யப்பட்டன. தமிழகத்தின் முதல் கள்ளிப்பூங்கா என்பதால், இயற்கை ஆர்வலர்களிடையே அதிக எதிர்பார்ப்பும் இருந்தது.பந்து, லில்லி, தாமரை போன்ற வடிவங்கள்; பல வண்ணங்களில் பூக்கும் கள்ளி; நாகதாளி, ரிவால்யூட் உள்ளிட்ட கள்ளிச்செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டது. அதோடு கற்றாழை ரகங்களும் நடவு செய்யப்பட்டு, விழிப்புணர்வுக்காக தகவல் பலகையும் வைக்கப்பட்டது.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் இந்த பூங்காவை சுற்றி பார்த்தனர். ஆனால், தற்போது, கள்ளிப்பூங்கா பொலிவிழந்து, இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு படிப்படியாக மறைந்து வருகிறது. சுற்றுலா பயணியருக்கு அமைக்கப்பட்ட நடைபாதை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது; கள்ளிச்செடிகளை விட களைச்செடிகளே அதிகம் காணப்படுகிறது.செடிகளின் முக்கியத்துவம் குறித்த தகவல் பலகைகளும் இல்லை. மதுபாட்டில்களும், கண்ணாடி சிதறல்களும் அங்கு செல்பவர்களின் கால்களை பதம் பார்த்து வருகிறது. வேலி இல்லாததால், சில செடிகளை பிடுங்கி எறிந்துள்ளனர்.இவ்வாறு, படிப்படியாக அமராவதி அணை கள்ளிப்பூங்கா சுவடு இல்லாமல் மறைந்து வருகிறது. தகவல் பலகை இல்லாததால், சுற்றுலா பயணியரும் அவ்விடத்துக்கு வருவதை தவிர்க்கின்றனர்.கள்ளிப்பூங்காவின் தற்போதைய நிலை வேதனையளிப்பதாக, இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த, கள்ளிப்பூங்காவை பொதுப்பணித்துறையினர் புதுப்பித்து தகவல் பலகை வைக்க வேண்டும்.நடைபாதை, நீருற்றுகளை புதுப்பித்தால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும். கள்ளி மற்றும் கற்றாழை குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படும்.