தேன்கூடு அகற்ற அலட்சியம்; குடியிருப்புவாசிகள் புகார்
பல்லடம்; பல்லடம், அறிவொளி நகரில், வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இக்குடிருப்பின் ஒரு பகுதியில், தேனீக்கள் ராட்சத கூடு கட்டி உள்ளது.கடந்த, 10ம் தேதி தேனீக்கள் விரட்டி கடித்ததில், ஐந்து பேர் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, தேன்கூட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அப்பகுதியில் வசிக்கும் தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ராஜசேகர் கூறியதாவது:அறிவொளி நகர் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதியில் ராட்சதத் தேன் கூடுகள் உள்ளன.இவை, சில மாதங்கள் முன்பாகவே அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் அதே இடத்தில் கூடு கட்டின. கடந்த, 10ம் தேதி திடீரென கூட்டில் இருந்து கலைந்த தேனீக்கள் பலரையும் தாக்கின. இதனால், தீயனைப்பு துறையினர் தேன் கூட்டை அகற்றினர். மறுநாளே மீண்டும் அதே இடத்தில் தேனீக்கள் கூடு கட்டின. இது தொடர்கதையாக உள்ளதால், மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தற்காலிக நடவடிக்கையை தவிர்த்து, நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மனு அளித்தும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளது கவலை அளிக்கிறது.