கால்நடை மருத்துவமனைக்கு ரூ.50 லட்சத்தில் புதிய கட்டடம்
- நமது நிருபர் -கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், நடப்பு 2025 - 26ம் ஆண்டுக்கான, கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம், திருப்பூர் மாவட்டத்தில் துவங்கியுள்ளது.காங்கயம் ஒன்றியம், பழைய கோட்டை ஊராட்சி, வேட்டைக்காரன்புதுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ்ராஜா தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், முகாமை துவக்கிவைத்தார்.கால்நடை வளர்ப்பாளர்களுக்கு, சிறந்த கன்று வளர்ப்பு, சிறந்த மேலாண்மைக்கான பரிசுகள் வழங்கி அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலும், ஒன்றியத்துக்கு 12 வீதம் மொத்தம் 156 கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இம்முகாம்களில், கால்நடைகளுக்கு, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசி செலுத்துதல், தாது உப்பு கலவை வழங்குவது, சிறிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆலோசனைகள் வழங்குவர். காங்கயத்திலுள்ள கால்நடை மருத்துவமனை கட்டடம் பழுதடைந்துள்ளது. முதல்வர் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, புதிய மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கு, ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, சாமிநாதன் கூறினார்.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் புகழேந்தி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.