மேலும் செய்திகள்
'கொடை'பூங்காவில் நெருப்புக்கோழி
25-Aug-2025
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சோமாஸ்கந்தருக்கு புதிய தேர் வடிவமைக்க, அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாகத்தில், தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. தேர்கள் வடிவமைத்து, 200 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டியில் இருப்பது போல், அம்மனுக்கு தனியாக தேர் வடிவமைக்க, அறங்காவலர் குழு முடிவு செய்தது. இதுதொடர்பாக, சிவாச்சார்யார்கள், ஸ்தபதிகளிடம் ஆலோசித்த போது, அம்மனுக்கு தேர் செய்தால், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கும் தேர் வடிவமைக்க வேண்டுமென தெரிவித்தனர். அதன்படி, புதிய தேர்கள் வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர். சோமாஸ்கந்தர் தேர் பெரியதாக இருக்க வேண்டும் என்பதால், தற்போதுள்ள தேர், அம்மன் தேராக பயன்படுத்தப்பட உள்ளது; சோமாஸ்கந்தருக்கு, புதிய தேர் வடிவமைக்கப்பட உள்ளது. விநாயகருக்கு ஏற்கனவே தேர் உள்ளது; இதேபோல், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கும், சிறிய தேர்கள் புதிதாக வடிவமைக்கப்பட உள்ளது. இது குறித்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது: ஸ்தபதியரிடம் இதுகுறித்து கேட்ட போது, திருச்செங்கோடு கோவில் தேரும், திருப்பூர் தேர்களும் ஏக காலத்தில் செய்யப்பட்டிருக்கலாம் என்றனர்; எப்படியும், 200 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஈஸ்வரன் கோவிலில், ஐந்து தேர்கள் இருக்க வேண்டும் என்கின்றனர். தற்போது, விநாயகர் தேர் இருப்பதால், கூடுதலாக, மூன்று தேர்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அலகுமலை கைலாச நாதர் கோவிலில் இருப்பது போல் சோமாஸ்கந்தர் தேர் வடிவமைக்கப்படும்; தற்போதுள்ள தேர், அம்மன் தேராக பயன்படுத்தப்படும். முருகருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் சிறிய தேர்கள் வடிவமைக்கப்படும். அடுத்த ஆண்டு, ஐந்து தேர்களுடன் தேர்த்திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில், முறையான அனுமதி பெற்று, ஆலோசனை கூட்டம் நடத்தி, பக்தர்கள் பங்களிப்புடன் தேர் வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
25-Aug-2025