டூவீலரில் சேலை சிக்கி புது மணப்பெண் பரிதாப பலி
திருப்பூர்; டூவீலரில் சேலை சிக்கி ஏற்பட்ட விபத்தில், புதுமணப்பெண் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் அருகே விஜயாபுரத்தை சேர்ந்த அக்பர் அலி, 61. ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர். இவரது மனைவி, அலிமா பீபி, 51, அரசு ஆசிரியராக பணிபுரிகிறார்.தம்பதியரின் மூத்த மகள், அனீஸ், 25. இவருக்கும் மதுரையை சேர்ந்த முகமது இம்ரான், 29, என்பவருக்கும் கடந்த மாதம், 28ம் தேதி திருமணம் நடைபெற்றது.புதுமண தம்பதியர், கடந்த, 7ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்காக, திருப்பூர் வந்தனர். கொண்டாட்டம் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியளவில், திருப்பூர் காங்கயம் ரோட்டிலுள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு பொருட்கள் வாங்குவதற்காக டூவீலரில் இருவரும் சென்றுள்ளனர். பள்ளக்காட்டுப்புதுார் அருகே சென்றபோது, அனீஸின் சேலை, டூவீலர் சக்கரத்தில் சிக்கி, விபத்து ஏற்பட்டது.இதில், கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவர், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.விபத்து குறித்து திருப்பூர் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமான 15 நாளில், பெண் இறந்தது அவரின் உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.