உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாசன கால்வாய்களை துார்வாரும் பணிக்கு ஒதுக்கீடு இல்லை! தேசிய வேலை உறுதி திட்டத்தில் கைவிரிப்பு

பாசன கால்வாய்களை துார்வாரும் பணிக்கு ஒதுக்கீடு இல்லை! தேசிய வேலை உறுதி திட்டத்தில் கைவிரிப்பு

உடுமலை; பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்குரிய மண் பகிர்மான கால்வாய்களை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்து, துார்வார வாய்ப்பில்லை என திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவிப்பதால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, 94,068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. இந்த மண்டல பாசனத்துக்கு விரைவில், திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில் ஆயக்கட்டு பகுதியில், துார்வாரப்படாத பகிர்மான மண் கால்வாய்களை தேடிப்பிடிக்க வேண்டிய நிலையில், பாசன சபையினர் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.

தொடர் கோரிக்கை

பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து சுழற்சி முறையில், தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு மண்டல பாசனத்துக்கும், ஓராண்டுக்கும் மேல் இடைவெளி ஏற்படுகிறது.இதனால், பயன்பாடு இல்லாமல், விடப்படும் மண் பகிர்மான கால்வாய்கள், துார்வாரப்படாமல், மண் மேடாகி விடுகிறது.பாசன சபை கட்டுப்பாட்டிலுள்ள இந்த கால்வாய்களை துார்வார, கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் எனப்படும் பாசன சபையினரிடையே நிதி இருப்பதில்லை.எனவே, பாசன காலம் துவங்கும் முன், இக்கால்வாய்களை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், துார்வார வேண்டும் என விவசாயிகள் மற்றும் பாசன சபையினர் ஊரக வளர்ச்சித்துறைக்கு அனுப்பும் கோரிக்கை அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம்.அந்த நிதியில் பணியாணை தயார் செய்து, ஊராட்சி வாரியாக தொழிலாளர்கள் துார்வாரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.இந்தாண்டும், பகிர்மான கால்வாய்களை துார்வார, பாசன சபையினர், பகிர்மான குழு நிர்வாகிகள், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநரிடம் நேரடியாகவும், இக்கோரிக்கை குறித்து வலியுறுத்தப்பட்டது.ஆனால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை பகிர்மான கால்வாய்களை துார்வார ஒதுக்கீடு செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.இதனால், விவசாயிகள், பாசன சபை நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும், அதிருப்தியில் உள்ளனர்.

அரசு நடவடிக்கை தேவை

விவசாயிகள் கூறியதாவது: நான்காம் மண்டல ஆயக்கட்டு பகுதியில், தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, கிளை கால்வாய், பகிர்மான மற்றும் விளைநிலங்களுக்கு செல்லும் கால்வாய்கள் அனைத்தும் புதர் மண்டி காணப்படுகிறது.பகிர்மான கால்வாய்களை தேடிப்பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. பாசன சபைகளிடம் போதிய நிதி இல்லாததால், விவசாயிகளிடம் பங்களிப்பு தொகை பெற்று, துார்வாரும் பணிகளை துவக்க வேண்டும். இருப்பினும், பணிகளை முழுமையாகவும், பாசன காலம் துவங்கும் முன் நிறைவு செய்வதும் கேள்விக்குறியாக உள்ளது. பாசன ஆதாரமான கால்வாய்களை துார்வார, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்தி கொள்ள, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.நான்காம் மண்டல பாசன கால்வாய்களை குறிப்பிட்ட காலத்துக்குள் தயார்படுத்தாவிட்டால், முதல் சுற்று தண்ணீரை முழுமையாக பயன்படுத்த முடியாது. இவ்வாறு, தெரிவித்தனர்.பல்வேறு பணிகளுக்காக தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் பணித்திறன் வீணடிக்கப்பட்டு வரும் நிலையில், கால்வாய்களை துார்வார விவசாயிகள் போராடுவது தொடர்கதையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை