பராமரிப்பு இல்லை; குற்றத்தடுப்பில் கோட்டை
உடுமலை நகரில், திருட்டு மற்றும் இதர குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமரா பொருத்தும் திட்டம், 2016ல், செயல்படுத்தப்பட்டது.போலீஸ் மற்றும் நகராட்சி சார்பில், பிரதான ரோடு மற்றும் குடியிருப்புகளில், 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றை ஒரு மையப்பகுதியில் வைத்து இயக்குவது போல், கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.முறையான பராமரிப்பு இல்லாமலும், காட்சிகளை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாலும், நடைமுறையில் இத்திட்டம் செயலிழந்து கைவிடப்பட்டது.இந்நிலையில், முக்கிய குற்றச்சம்பவங்களின் போது, கேமரா பதிவுகள், குற்றவாளிகளை கண்டறிய முக்கிய பங்கு வகிப்பதால், கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை எழுந்தது.கடந்த, 2022ல், நகர எல்லைகளான, திருப்பூர் ரோடு ஏரிப்பாளையம் மூன்று ரோடு சந்திப்பு, பழநி ரோடு- கொழுமம் ரோடு சந்திப்பு, எலையமுத்துார் பிரிவு, தளி ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு என அனைத்து பகுதிகளிலும், 32 கேமராக்கள் பொருத்தப்பட்டன.இந்த கேமராக்கள், உடுமலை போலீஸ் ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ள, கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை. புறநகர் பகுதியிலும் இதே நிலையே உள்ளது.பிரதான குடியிருப்புகளில், சம்பந்தப்பட்ட குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சார்பில், கேமராக்கள் பராமரிக்கப்படுகிறது. ஆனால், நகரின் பிரதான பகுதிகளிலுள்ள கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு உள்ளிட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில், கேமராக்களின் நிலை குறித்து குறிப்பிட்ட இடைவெளிகளில், போலீசார், நகராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து பராமரிக்க வேண்டும். கிராமங்களில் இல்லை
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், அதிக மக்கள் தொகை உள்ள கிராமங்களிலும், பிரதான ரோடு சந்திப்புகளிலும், திருட்டுகள் அதிகளவு நடப்பதால், கண்காணிப்பு கேமரா பொருத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்பகுதிகளில், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் வாயிலாக கேமராக்கள் பொருத்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'பல்வேறு இடங்களில் கேமராக்களை குறிப்பிட்ட இடைவெளியில் சரிசெய்யும் பணி நடக்கிறது. தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வாயிலாக, கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்படும்' என்றனர்.