மார்பகப் புற்றுநோயால் யாரும் மடியக்கூடாது; தாய் நினைவாக தனயன் அறச்செயல் தாய் நினைவாக தனயன் அறச்செயல்
பல்லடம் : பல்லடத்தில், தாயை பிரிந்த நேரத்திலும், அவரது நினைவாக, அவரின் மகன் செய்த தர்மச் செயல், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.பல்லடம் அருகே சின்ன வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மனைவி காஞ்சனா, 67. இவரது மகன்கள் செந்தில்குமார், 43, கார்த்திகேயன், 40. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த காஞ்சனா, கடந்த, 28 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது மறைவு மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இவரது மகன் கார்த்திகேயன், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, லயன்ஸ் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.லயன்ஸ் சங்க முன்னாள் கவர்னர் பழனிசாமி கூறியதாவது:இந்தியாவில்தான் மார்பக புற்றுநோய் காரணமாக அதிக பெண்கள் உயிரிழக்கின்றனர். அவ்வகையில், 28 ஆண்டாக சிகிச்சை பெற்று வந்த கார்த்திகேயனின் தாய் காஞ்சனா உயிரிழந்தார். இதுபோன்ற ஒரு நிலை இனி யாருக்கும் வரக்கூடாது என்பதால், திருப்பூர் லயன்ஸ் சங்கம் (324சி) சார்பில், 'மேமோ பார் மாம்' என்ற புற்றுநோய் நோய் கண்டறியும் திட்டத்தை நிறைவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.இத்திட்டம் வாயிலாக, மொபைல் வேனில், 'மேமோ கிராம்' என்ற இயந்திரம் பொருத்தப்பட்டு, அதில், பெண்கள், தாய்மார்கள் புற்றுநோய் பரிசோதனையை இலவசமாக செய்து கொள்ளலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்படும் பட்சத்தில், நோயை குணப்படுத்த வாய்ப்பு உள்ளது.காஞ்சனாவுக்கு ஏற்பட்ட துயரம் இனி யாருக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்துடன், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தாயின் சடலத்தை அடக்கம் செய்த மறுகணமே, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை 'மேமோ பார் மாம்' திட்ட நிதிக்காக கார்த்திகேயன் வழங்கியது நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.