பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் இல்லை: மாற்றுத்திறனாளிகள் பாதிப்பு
உடுமலை: புது பஸ் ஸ்டாண்டில், காட்சிப்பொருளாக உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உடுமலை புது பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வந்து, பல மாதங்களாகியும் பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டில், பயணியருக்கு தேவையான கழிப்பிட வசதியில்லை. இரண்டு கழிப்பிடங்கள் துர்நாற்றம் வீசி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், நடைபாதை சுற்றுச்சுவரை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். புது பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் உள்ளே நுழையும் பகுதியில், கட்டப்பட்ட கழிப்பிடங்களும் முறையாக பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம் பூட்டியே உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டிலும் அவர்களுக்கு கழிப்பிட வசதியில்லை. நீண்ட நேரம் பஸ்சுக்கு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள், கழிப்பிட வசதியில்லாததால் பாதித்து வருகின்றனர். உடுமலை நகராட்சி நிர்வாகத்தினர், இரு பஸ் ஸ்டாண்ட்களிலும் உள்ள கழிப்பிடங்களின் நிலை குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். காட்சிப்பொருளாக உள்ள இதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, பயணியரின் பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.