ஜொலிக்காத அகல் விளக்கு தயாரிப்பு மண் தட்டுப்பாடு: தொழிலாளர் அதிருப்தி
பொங்கலுார் : இன்னும் ஒரு மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்திருநாள். அந்நாளில் கோவில்கள் மற்றும் வீடுகள் தீபங்களால் ஜொலிக்கும். இதற்காக பொதுமக்கள் தீபங்களை அதிக அளவில் கொள்முதல் செய்வர்.தீபத் திருநாளுக்கு நாட்கள் நெருங்கி உள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் ஒருங்கிணைந்த கோவை மாவட்டமாக இருந்த பொழுது இப்பகுதிகளை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளூரில் கிடைக்கும் மண் ஆதாரங்களை தவிர, ஊத்துக்குளி அருகே உள்ள பாரத்தொழுவு குளத்தில் மண் எடுப்பது வழக்கம். தற்பொழுது மாவட்டம் பிரிக்கப்பட்ட பின் அந்தந்த மாவட்டங்களில் மட்டுமே மாவட்ட கலெக்டர்களிடம் அனுமதி பெற முடிகிறது.திருப்பூர் மாவட்டத்தில் வண்டல் மண்ணுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .இதுகுறித்து காங்கயம் அருகே சம்பந்தம்பாளையத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கவேல் -- துளசிமணி தம்பதியினர் கூறியதாவது:பொங்கலுார், கோவில்பாளையம், காங்கயம், சம்பந்தம்பாளையம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே மண் பாண்டம் தயார் செய்யப்படுகிறது. லாபம் மிகவும் குறைவாகவே கிடைப்பதால் பலரும் வேறு தொழிலுக்கு மாறி விட்டனர். கத்தாங்கண்ணியில் அனுமதி பெற்று மண் எடுத்தோம்.மண் பானையை சூடு படுத்தும் பொழுது வெடித்து விடுகிறது. நல்ல மண் கிடைத்தால் எங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். திருப்பூர் மாவட்டத்தில் நல்ல வண்டல் மண் கிடைப்பதில்லை. மண் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வண்டல் மண் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.