உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வடகிழக்கு பருவ மழையால் செழிக்கும் சோளம் கால்நடைக்கு தீவனம்: விவசாயிகள் கவனம்

வடகிழக்கு பருவ மழையால் செழிக்கும் சோளம் கால்நடைக்கு தீவனம்: விவசாயிகள் கவனம்

திருப்பூர் : கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படும் சோளப்பயிர், கனமழை காரணமாக செழிப்பாக வளர்ந்துள்ளது.கால்நடை வளர்ப்பவர்கள், ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் வழங்க இயலாது; மழை காலத்தை தொடர்ந்து, சில மாதங்கள் பசுந்தீவனம் கிடைக்கிறது. பிறகு, ஆண்டு முழுவதும் பதப்படுத்திய சோளத்தட்டு வழங்குகின்றனர். கால்நடைகளும், சோளத்தட்டை, விரும்பி உட்கொள்கின்றன.மானாவாரி நிலங்களில், 80 சதவீதம் சோளப்பயிர் சாகுபடி செய்வது வழக்கம்; மீதியுள்ள நிலங்களில், நிலக்கட்டலை, பயறு வகைகள் பயிரிடுகின்றனர். குறிப்பாக, வடகிழக்கு பருவத்தில் பெய்யும் மழையை பயன்படுத்தி, மானாவரி சாகுபடியாக சோளப்பயிர் மகசூல் எடுக்கின்றனர்.ஆவணி - புரட்டாசி மாதங்களில் விதைக்கப்படும் சோளம் முளைத்து, ஐப்பசியில் நன்கு வளர்கிறது. கார்த்திகை, மார்கழி மாதத்தை தொடர்ந்து, தை மாதம் அறுவடை செய்யப்படுகின்றன. பருவமழை கை கொடுக்கும் போது, கதிர்விட்டு, சோளமும் மகசூல் எடுக்க முடிகிறது.அறுவடை செய்யப்படும் சோளப்பயிர், வெயிலில் உலர்த்தி பக்குவப்படுத்தப்படுகிறது. நன்கு காய வைத்து, பிறகு ஓரிடத்தல் மழைநீர் படாதபடி சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும் தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக, வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், விளைவிக்கப்பட்ட சோளப்பயிர் நன்கு வளர்ந்துள்ளது.இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், 'மானாவாரி நிலத்தில், ஆடிப்பட்டத்தில் சோளம் மட்டும் அதிகம் விதைக்கப்படுகிறது; மழை இல்லாதபட்சத்தில், ஆவணி மாதம் விதைக்கிறோம். நன்கு வளர்ந்த பிறகு, அறுவடை செய்து, பக்குவப்படுத்தி வைக்கிறோம். கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் தீவனமாக பயன்படுத்துகிறோம். இந்தாண்டு மழை கருணை காட்டியதால், பயிர் வேகமாக வளர்ந்து வருகிறது. எப்படியும், இரண்டு மாதங்களுக்கு மழை இருக்கும்; சோளப்பயிர் சாகுபடி கைகொடுக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை