நாட்டிங் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
அவிநாசி; வேலை நிறுத்தம் செய்து வந்த அவிநாசி நாட்டிங் உரிமையாளர் சங்கத்தினர், அதனை வாபஸ் பெற்றனர். அவிநாசி அருகே தெக்கலுாரில், அவிநாசி நாட்டிங் உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம், அதன் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கதிரேசன், உதவி துணைத் தலைவர் மருதாசலம், செயலாளர் யோகேஸ்வரன், துணை செயலாளர் சந்தோஷ், உதவி துணை செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் கார்த்திக், துணை பொருளாளர் சரவணகுமார், உதவி பொருளாளர் சிவசங்கர், ஐடி பிரிவு ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், மகேஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த, 22ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் படி, ஜூலை 30ம் தேதியிலிருந்து கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டு வேலை நிறுத்தம் துவங்கியது. இதனை தொடர்ந்து, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ரகத்துக்கு ஏற்றவாறு கூலி உயர்வு தருவது என முடிவு செய்யப்பட்டது. இதனால், நேற்று காலை முதல், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாகவும், அச்சுப் பிணைப்பு தொழில் தடையின்றி இயங்கும் எனவும் அவிநாசி நாட்டிங் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.