உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தகவல் வழங்க தாமதம் அதிகாரிக்கு அபராதம்

தகவல் வழங்க தாமதம் அதிகாரிக்கு அபராதம்

பல்லடம் சாமளாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 56. ஓட்டல் உரிமையாளர். தன்னார்வலரான இவர், கூட்டுறவு சங்கங்களில், இறந்து போன உறுப்பினர்களின் வரவு - செலவு கணக்குகள் முடிக்க பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்த சட்ட திட்டங்கள் அடங்கிய பக்கங்களின் நகல் வழங்குமாறு, 2018ல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கூட்டுறவுத் துறை, பொது தகவல் அலுவலருக்கு விண்ணப்பித்தார். தகவல்கள் வழங்க இழுத்தடித்ததால், பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செல்வராஜ், மாநில தகவல் ஆணையருக்கு புகார் அனுப்பினார். விசாரணை மேற்கொண்ட மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி, 'மனுதாரர் கேட்கும் தகவலை குறித்த நாட்களுக்குள் வழங்கியிருந்தால் இந்த விசாரணையே வந்திருக்காது. வழங்கப்பட்ட தீர்ப்பின்படி நடக்காமல், 16 மாதம் கழித்து, மனுதாரரை நேரில் பார்வையிட அனுமதித்தது மட்டுமன்றி அவருக்கான தகவல்களை வழங்க, 6 மாதம் காலம் கடத்தியதும் ஏற்புடையதல்ல. அரசுக்கு, 8,465 ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்திய அப்போதைய பொது தகவல் அலுவலர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற விளக்கங்களை அவரிடம் இருந்து பெற்று, தற்போதைய பொது தகவல் அலுவலர் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில், அப்போதைய பொது தகவல் அலுவலர் அளிக்க கூடிய விளக்கம் ஏதுமில்லை என்ற கருதி அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மனுதாரருக்கு மன உளைச்சலையும், பண விரயத்தையும் ஏற்படுத்திய வகையில், 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கிவிட்டு, அது குறித்த அறிக்கையை, செப்., 9ம் தேதிக்குள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்குமாறு, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் கோகுல ராஜாவுக்கு உத்தரவிடப்படுகிறது' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !