உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி இளநிலை பொறியாளரை ஒருமையில் பேசிய தி.மு.க., நிர்வாகி சங்கத்தில் புகார் கொடுக்க அதிகாரி முடிவு

மாநகராட்சி இளநிலை பொறியாளரை ஒருமையில் பேசிய தி.மு.க., நிர்வாகி சங்கத்தில் புகார் கொடுக்க அதிகாரி முடிவு

அனுப்பர்பாளையம் : மாநகராட்சி இளநிலை பொறியாளரிடம், தி.மு.க., கவுன்சிலரின் கணவர், ஒருமையில் பேசியது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்திற்குட்பட்ட, 19வது வார்டு, எஸ்.எஸ்., நகரில் ரோடு போட மூன்று மாதங்களுக்கு முன் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. நிதி பற்றாக்குறையால் ரோடு பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், ரோடு பணியை விரைவாக முடிக்கக்கோரி வார்டு கவுன்சிலர் லதா, மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதனால், நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த, 7ம் தேதி மாலை மாநகராட்சி இரண்டாவது மண்டல இளநிலை பொறியாளர் சுஜாத் அலி, ரோடு பணியை பார்வையிட சென்றுள்ளார்.அங்கு வந்த கவுன்சிலர் லதா மற்றும் அவரது கணவரும் அந்த வார்டு தி.மு.க., செயலாளருமான மோகன், 'வார்டுக்குள் நடைபெறும் பணியை வார்டு கவுன்சிலரிடம் சொல்லாமல், எப்படி செய்யலாம்' என கேட்டுள்ளார். இதனால் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், அதிகாரியை மோகன் ஒருமையில் தரக்குறைவாக பேசி உள்ளார். தகவலறிந்து வந்த மண்டல தலைவர் கோவிந்தராஜ், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.இது குறித்து, இளநிலை பொறியாளர் சுஜாத் அலி கூறியதாவது:நிறுத்தப்பட்ட சாலை பணிகள் துவங்க ஒப்பந்ததாரருடன் பகுதிக்கு சென்றோம். அப்போது வார்டுக்குள் ஏன் என்னிடம் சொல்லாமல் பணி செய்கிறிர்கள் என கேள்வி எழுப்பினார். தகராறில் ஈடுபட்டு மரியாதை குறைவாக ஒருமையில் பேசினார். நான் திருப்பூர் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராக உள்ளதால், நாளை (இன்று) சென்னை - ஆவடியில் எங்கள் சங்க கூட்டம் நடக்கிறது. அதில் புகார் அளிக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த விவகாரம் குறித்து, தி.மு.க., வார்டு கவுன்சிலர் லதாவின் கணவர் மோகன் கூறியதாவது:நிதி பற்றாக்குறையால் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. ஜல்லி கற்களால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். விபத்து ஏற்பட்டது.மீண்டும் ஜல்லிக்கற்கள் கொட்டினால், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தடுத்து நிறுத்தினேன். வார்டுக்குள் வருவதையும், பணிகள் செய்வதையும் அதிகாரிகள் எங்களிடம் சொல்வதில்லை. மக்கள் எங்களிடம் தான் கேள்வி கேட்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை