பயிர்க்கடன் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்: விவசாயிகள் வேதனை
உடுமலை: கூட்டுறவு சங்கங்களில் அதிகாரிகள், விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் பயிர்க்கடன் வழங்காமல், அலைக்கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. வட கிழக்கு பருவ மழை துவங்கி, ராபி பருவ சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ள நிலையில், பயிர்க்கடன்கள் வழங்குவதில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கூட்டுறவு அணி மாநில ஒருங்கிணைப்பா ளர் குப்புச்சாமி கூறியதாவது: கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, வட்டியில்லா பயிர்க்கடன் விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் செயலர்கள், ஊழியர்கள், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். பயிர்க்கடன் கோரி விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை காலதாமதமாகி வருகிறது. கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தாமல், அதிகாரிகள் தனி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால், பல சங்கங்களுக்கு ஒரே அலுவலர் உள்ள நிலையில், அவர்கள் வருவதற்கு காலதாமதம் ஆகிறது. குறைந்தபட்சம், 25 கடன் விண்ணப்பங்கள் இருந்தால், மட்டும் தான் வருவார்கள் என கூறுகின்றனர். அதோடு, ஒரு சில கூட்டுறவு கடன் சங்கங்களில், உரம் ரசீதுக்கு விவசாயிகளிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு, உரம் வழங்குவதில்லை. இதனால், விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு, தனியாரிடம் கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து, தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும், பயிர்க்கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.