உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லஞ்சத்தில் ஊறும் அதிகாரிகள் திருந்தணும்! பிச்சை எடுத்து சமூக ஆர்வலர்கள் போராட்டம்

லஞ்சத்தில் ஊறும் அதிகாரிகள் திருந்தணும்! பிச்சை எடுத்து சமூக ஆர்வலர்கள் போராட்டம்

பல்லடம்:'அரசு அதிகாரிகள் லஞ்சத்தில் ஊறி திளைக்கின்றனர். அவர்கள் திருந்த வேண்டும்' என்று கூறி, சமூக ஆர்வலர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல்லடம் தாலுகா அலுவலக நில அளவை பிரிவில் உள்ள சில அலுவலர்கள், பணம் இருந்தால் மட்டுமே நில அளவை செய்ய முன் வருகின்றனர். லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.லஞ்சம் தர மறுப்பவர்களை ஆண்டுக்கணக்கில் அலைக்கழிக்க வைக்கின்றனர் என பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதற்காக, அதிகாரிகளை கண்டித்து, பல்லடம் தாலுகா அலுவலகம் முன், சமூக ஆர்வலர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதி, தங்களது இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அளவீடு செய்து தரும்படியும் விண்ணப்பித்து, ஓராண்டு காலமாக காத்திருக்கின்றனர். இது தொடர்பாக நில அளவீடு செய்ய வந்த அலுவலர், நில அளவீடு செய்த பின், ஆக்கிரமிப்பாளரை தனியாக சந்தித்துள்ளார்.அதன்பின், இருக்கும் இடத்தில் அப்படியே இருந்து கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் கூறிவிட்டு சென்றுள்ளார். இப்படி சொல்வதற்கு தான், நில அளவைத் துறை உள்ளதா. அத்துறையினர் லஞ்சத்தில் ஊறியுள்ளனர். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளும் இதனை கண்டுகொள்வதில்லை.அதிகாரிகளுக்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை. எனவே, பிச்சை எடுத்து அதில் வரும் பணத்தில், அதிகாரிகளுக்கு நல்ல புத்தகங்களை வாங்கி தர தீர்மானித்துள்ளோம். அவற்றை படித்தாவது அதிகாரிகள் திருந்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களிடம் தாசில்தார் ஜீவா மற்றும் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் பேச்சு நடத்தினர். ''விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தாசில்தார் உறுதி அளித்ததால், சமூக ஆர்வலர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ