ஓம் நமசிவாய மந்திரம்: காமாட்சிபுரி ஆதினம் விளக்கம்
பல்லடம்; பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் நவக்கிரஹ கோட்டையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, மகா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. இதனை துவக்கி வைத்து, கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது: நமக்கு முன் எது தெரிகிறதோ அதுதான் உண்மை. நாம் முன்னெடுக்கும் அனைத்து காரியங்களும் தங்கு தடையில்லாமல் நடக்கவே கடவுள் வழிபாடு அவசியம். ஓம் நமசிவாய என்ற மந்திரம் தீர்த்த கலச கும்பத்தின் மூலம் இறைவனை சென்றடையும். பஞ்ச பூதத்துக்கும் தனித்தனியாக மந்திரம் சொல்ல முடியாது என்பதால்தான், ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை கூறுகிறோம். இன்பமும் துன்பமும் கொடுப்பது கடவுளே. எனவே தான், துன்பம் வரும்போது மட்டும் கடவுளை அழைக்காமல், நன்றாக இருக்கும்போதே வழிபட வேண்டும். மனிதனின் மனம் குழந்தையை போன்று அலைபாயக்கூடியது. கடவுள் அனுக்கிரஹத்தால்தான் இன்று நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்கு வந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால், பக்தர்கள், குபேர லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தனர். அம்மையப்பராக சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.