தபால் துறை வங்கி மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை எளிது
திருப்பூர்; திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை: தபால் துறையில் செயல்படும், இந்தியா போஸ்ட்பேமென்ட் வங்கியில், 2018 முதல் தற்போது வரை, 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள், சேமிப்பு கணக்கு துவக்கியுள்ளனர். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கணக்கு, விவசாயிகளுக்கான பி.எம்., கிஷான் கணக்கு, வேலை உறுதியளிப்பு திட்ட கணக்குகள், கர்ப்பிணிகள், முதியோர் உள்ளிட்டோருக்கான அரசு உதவித் தொகையை பெற முடியும். மிக எளிதாக, இவற்றை கையாள முடியும். வாரிசு நியமனம் செய்வதற்கான வசதியும் மாநிலம் முழுக்க உள்ள தபால் நிலையங்களில் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.பி.பி., செயலி வாயிலாக, தபால் காரரின் உதவியுடன் 'ஆதார் சீடிங்' செய்து, அரசின் நேரடி மானியத்தை எளிதாக பெற முடியும். வங்கிக்கணக்குடன் தபால் சேமிப்பு கணக்கை இணைத்து, ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு எளிமையாக வீட்டில் இருந்த படியே 'ஆன்லைன்' வாயிலாக பணம் செலுத்தலாம். காப்பீடு திட்டத்திலும் இணையலாம். வியாபார கணக்கு வாயிலாக யு.பி.ஐ., ஸ்டிக்கர் ஒட்டி பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.