இயற்கை விவசாய விழிப்புணர்வு கருத்தரங்கு
அவிநாசி: அவிநாசி வட்டார வேளாண்மை துறை சார்பில் வேலாயுதம்பாளையத்தில் இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விவசாய கருவிகள் உபயோகப்படுத்தும் முறை குறித்த கண்காட்சி நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கு மூலம் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போர்ட் பாக்டீரியா, பட்டாசு பாக்டீரியா போன்றவற்றின் பயன்பாடுகள், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் போன்றவற்றுக்கும் பயன்பாடு முறைகள் பற்றியும் விளக்கமாக தெரிந்து கொண்டோம். இயற்கை விவசாயிகளுக்கு உண்டான சந்தை வாய்ப்புகள் அதில் உள்ள சவால்கள் மேலும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தி நுகர்வோர்களை நேரடியாக சென்றடையும் வழிமுறைகள், இயற்கை விவசாயிகளின் காய்கறிகள் போன்றவைகளை நேரடியாக விவசாயிகள் விற்பனை செய்வது போன்றவற்றை தெரிந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர். கண்காட்சியில் பவர் டில்லர், பிரஸ் கட்டர், பேட்டரி ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர், சொட்டு நீர் போன்றவற்றை உபயோகிக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்து விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வேளாண்மை துறை உதவி அலுவலர் வினோத்குமார், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.