வாகன விபத்தில் பெயின்டர் பலி; ஆக்கிரமிப்பு அகற்றாதது காரணமா?
பல்லடம்; பல்லடம் அருகே, வாகன விபத்து ஒன்றில், பெயின்டர் பலியான நிலையில், நெடுஞ்சாலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்லடத்தை அடுத்த கரைப்புதுார், லட்சுமி நகரை சேர்ந்தவர் ரமேஷ், 47; பெயின்டர்.- சின்னக்கரை - கரைப்புதுார் செல்லும் ரோட்டில், டூவீலர் எடுக்க முயன்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்து, எதிரே வந்த கார் மோதி உயிரிழந்தார். இந்த ரோட்டில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததே உயிரிழப்புக்கு காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்பகுதியினர் கூறியதாவது: சின்னக்கரை -- கரைப்புதுார் வழியாக, 63 வேலம்பாளையம் செல்லும் ரோடு, பல்லடம்- - திருப்பூர் ரோட்டுடன், பல்லடம் -- மங்கலம் ரோட்டை இணைப்பதால், அதிகப்படியான சரக்கு வாகனங்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. மேலும், சின்னக்கரை - கரைப்புதுார் வரை ஏராளமான டையிங் நிறுவனங்கள், பனியன் கம்பெனிகள், பள்ளி கல்லுாரி, கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்லும் இந்த ரோடு, நெடுஞ்சாலை துறை வசம் உள்ளது. தனியார் ஆக்கிரமிப்புகள் மூலம், ரோடு சுருங்கி உள்ளது. இதன் காரணமாக, அடிக்கடி இந்த ரோட்டில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இன்று (நேற்று) நடந்த விபத்துக்கும் ஆக்கிரமிப்பு காரணமாக கருதப்படுகிறது. ரோடு குறுகலாக இருந்ததாலும், கார் வரும் அதே நேரம், பெயின்டர் தவறி விழுந்ததாலும் விபத்து நேரிட்டுள்ளது. ரோடு அகலமாக இருந்திருந்தால், விபத்திலிருந்து பெயின்டர் தப்பி இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சின்னக்கரை -- கரைப்புதுார் வரை, நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.